|
இவ்வாறு
மக்கள் சென்று குவியும் இப்புதிய வேதத்தின்மீது ஐயங்
கொண்டு, கவிதைக்குரிய கருத்து வளத்தோடு ஓங்கிய அவ்வேத நூலைக்
கற்றுக் கடக்க இயலாமல், அங்குள்ள கற்றோர் கூட்டங் கூட்டமாக
அந்நகரத்து எங்கும் அலைந்து கொண்டிருந்தனர். ஒரு நாள் அழகு மிகுந்து
பூத்த சோலை வழியாகச் செல்லும் சூசையை அவர்கள் கண்டு, செவிக்கு
மிகுந்த இனிமை தரும் சொல்லைக் கேட்க விரும்பி, ''முனிவரே, இங்கு
வருக'' என்றனர்.
| 147 |
நாஞ்செய்த
குறையோ பன்னா
ணாமிவட்
டொழுத தேவர்
தாஞ்செய்த குறையோ விக்கா
றளருணர்
வெஞ்ச வையென்
றாஞ்செய்த மலர்கொய் யிந்நா
டகன்றொருங்
கொளித்த தென்னோ
தேஞ்செய்த மதுச்சொ னல்லோய்
செப்புதி
யென்றார் மாதோ. |
| |
''நாம் செய்த
குறையோ? பல் நாள் நாம் இவண் தொழுத தேவர்
தாம் செய்த குறையோ? இக் கால் தளர் உணர்வு எஞ்ச, ஐ என்று,
ஆம் செய்த மலர் கொய் இந்நாடு அகன்று ஒருங்கு ஒளித்தது என்றோ?
தேம் செய்த மதுச் சொல் நல்லோய், செப்புதி'' என்றார் மாதோ |
வந்த
சூசையை நோக்கி, ''இனிமை செய்த தேன் போன்ற சொல்லை
உடைய நல்லவனே, நாங்கள் செய்த குறை காரணமோ? பல காலமாய்
நாங்கள் இங்கே தொழுது வந்த தேவர்கள் செய்த குறைதான் காரணமோ?
இந்நாளில் எங்களுக்கு தளர்ச்சி உணர்வே மிஞ்சுமாறு, நீர்வளம் தந்த
மலர்களைக் கொய்து அணியும் இந் நாட்டைத் திடீரென்று விட்டகன்று
அத்தேவரெல்லாம் ஒருங்கே ஒளித்துக்கொண்டது ஏனோ? சொல்லுவாய்''
என்றனர்.
|