பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 268

''குரு சிலர்க்கு அமைச்சர் வீரர் கொள்கையின், முதல்வற் சூழ்ந்து
வரு சிலர் தேவர் என்னில், வழு அதோ?'' என்ன அன்னான்,
''குரு சிலர் நாமம் தானும், கோ உரிப் பணிவும் சூழ்ந்து
வரு சிலர்க்கு இட்ட காலை வழு அன்றோ?'' என்றான் சூசை.


     வினாதத்தன், ''அரசருக்கு அமைச்சர் வீரர் என்று கொள்வது போல்,
முதல்வனாகிய கடவுளைச் சூழ்ந்து வரும் சிலரைத் தேவரென்று
கொண்டால், அது தவறோ?'' என்று வினவினான், சூசை, ''அரசர்க்கு உரிய
பெயரை யேனும், அரசனுக்கு உரிய வணக்கத்தையேனும், சூழ்ந்து வருகின்ற
சிலருக்குக் கொடுத்தபோது தவறாகும் அன்றோ?'' என்றான்.

 
                 153
இரவலர் மாட்சி யொப்ப
     வீடறி வின்மை காட்டும்
புரவலர்ச் சூழ்ந்த வைவேற்
     பொநரு மமைச்சர் தாமு
முரவல நாதன் றன்னா
     லுணரவுஞ் செயவும் வல்லாய்ப்
டரவல நூலும் வேலும்
     பரிசிலா திழிவா மென்றான்.
 
"இரவலர் மாட்சி ஒப்ப, ஈடு அறிவு இன்மை காட்டும்
புரவலர்ச் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும்,
உரம் வலநாதன் தன்னால் உணரவும் செயவும் வல் ஆய்,
பரம் வல நூலும் வேலும் பரிசு இலாது இழிவு ஆம்" என்றான்

     சூசை தொடர்ந்து, ''அரசரைச் சூழ்ந்த கூர்மையான வேலைத்
தாங்கிய வீரரும் அமைச்சரும் இரப்போருக்கு உரிய மாட்சிக்கு ஒப்பாக
அவ்வரசருக்கு வலிமையும் அறிவும் இல்லாமையையே காட்டும். எல்லா
வலிமையும் வல்லவனாகிய ஆண்டவன் தானாகவே அறியவும் செய்யவும்
வல்லவனாகையால், புறத்திருந்து வரும் வல்லமையாகிய நூலறிவும் வேல்
வலிமையும் மேன்மையென்று அமையாமல் இழிவே தரும்'' என்றும்
சொன்னான்.

     அரசர் தமக்கு இல்லாத வலிமையை வீரரிடமும் அறிவை
அமைச்சரிடமும் இரந்து பெற்றது போல் ஆகு மென்பது கருத்து.