பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 270

                மெய்க் கடவுள் இலக்கணம்

     - விளம், - மா, - விளம், - மா, - விளம், - விளம், - மா

 
            155
மற்றவ ரினிதீ தடிகளே யென்ன
     மலர்மது வாயின னருளிக்
கற்றவர் பருகப் பகர்குவ புகழ்வ
     காமுறிக் கேட்டனர் களிப்ப
முற்றவர் தெளிக முளரிவாய் மதுவின்
     முகைப்பன குளிர்ப்பன சலமற்
றுற்றவர் வான்மே லுய்ப்பன தெய்வ
     வோதிக ணுவலிய வலித்தான்.
 
மற்றவர், ''இனிது ஈது, அடிகளே'' என்ன, மலர் மது வாயினன் அருளி,
கற்றவர் பருக, பகர்குவ, புகழ்வ, காம் உறிக் கேட்டனர் களிப்ப,
முற்று அவர் தெளிக முளரி வாய் மதுவின் முகைப்பன குளிர்ப்பன, சலம்
அற்று உற்றவர் வான்மேல் உய்ப்பன தெய்வ ஓதிகள் நுவலிய வலித்தான்;

     வசிட்டன் சொன்னதை ஒட்டி மற்றவரும், ''முனிவரே, இது
எமக்கெல்லாம் இனிது'' என்றனர். மலரிலுள்ள தேன் போன்ற வாய்ச் சொல்
கொண்ட சூசை அவர்கள் மீது அருள் கொண்டு, கற்றவர் பருகவும்,
பருகினவர் பிறர்க்கு எடுத்துச் சொல்லவும், கேட்ட யாவரும் புகழவும்,
விருப்பமுற்றுக் கேட்டவர் மகிழவும், தாமரை மலரிலுள்ள தேன் போல்
மலர்வனவும் குளிர்விப்பனவுமான கருத்துக்களைக் கேட்டு அவர்கள்
முற்றிலும் தெளிவு பெறவும், வஞ்சமில்லாமல் கூர்ந்து கேட்டவரை வான்
வீட்டிற்குக் கொண்டு சேர்க்கக் கூடிய தெய்வ அறவுரைகளை எடுத்துச்
சொல்லத் துணித்தான்:

     'காமுறீஇ' என்று அளபெடுக்க வேண்டிய விடத்து, சீர்நோக்கி
அளபெடை இன்றி வந்தது.