பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 271

                    156
ஈறில நன்மை நிறைவுமோர் குறைமுற்
     றின்மையுந் தொழத்தகுந் தெய்வ
மாறில வியல்பே வேரிதாய்க் கிளைத்து
     வரும்பல சினையென நூலோ
ராறிலக் கணங்க ளுரைத்தவை யுள்ளோ
     னாண்டகை யிலனல னென்றார்
தாறில சுடரை மைவரிந் தன்ன
     சாற்றுதும் புன்சொலா லவையே.
 
''ஈறு இல நன்மை நிறைவும் ஓர் குறை முற்று இன்மையும் தொழத்
                                  தகும் தெய்வ
மாறு இல இயல்பே. வேர் இதாய்க் கிளைத்து வரும் பல சினை
                                  என நூலோர் அவை
ஆறு இலக்கணங்கள் உரைத்து 'அவை உள்ளோன் ஆண்டகை;
                                  இலன் அலன்' என்றார்.
தாறு இல சுடரை மை வரிந்து அன்ன சாற்றுதும் புன் சொலால்
                                  அவையே.

     ''முடிவில்லாத நன்மையின் நிறைவும் முற்றிலும் குற்றம் ஒன்றும்
இல்லாமையும் தொழத் தகும் கடவுளுக்கு மாறுதல் இல்லாத இயல்பாகும்.
இதையே வேராகக் கொண்டு கிளைத்து வரும் கிளை போலத் தெய்வ
நூலோர் ஆறு இலக்கணங்கள் கூறி, 'அவை உள்ளோனே ஆண்டவன்;
அவை இல்லாதவன் ஆண்டவன் அல்லன்' என்றனர். அளவில் அடங்காத
கதிரவனை மையால் வரைந்து காட்டுவது போல், புன் சொல்லால் நாமும்
அவற்றைச் சொல்வோம்.

 
                157
தன்வயத் தாதன் முதலில னாதல்
     தகும் பொறி யுருவில னாதல்
மன்வயத் தெல்லா நலமுள னாதல்
     வயின்றொறும் வியாபக னாதல்
பின்வயத் தின்றி யொருங்குட னனைத்தும்
     பிறப்பித்த காரண னாதல்
பொன்வயத் தொளிர்வான் முதலெலா வுலகும்
     போற்றுமெய் யிறைமையி னிலையே.