பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 28

                 47
மன்னர சிழந்தென வானி னின்றுவான்
றன்னர செமக்கெலாந் தரவந் தான்பகைத்
துன்னர செடுப்பவீங் குணர்ந்துற் றானெனக்
கொன்னர சிழிவுறக் குழைந்துள் ளெண்ணவோ.
 
"மன் அரசு இழந்தென வானினின்று வான்
தன் அரசு எமக்கெலாம் தர வந்தான் பகைத்து
உன் அரசு எடுப்ப ஈங்கு உணர்ந்து உற்றான் எனக்
கொன் அரசு இழிவு உறக் குழைந்து உள் எண்ணவோ?

      "தனது நிலைபெற்ற அரசை இழந்த தன்மையாக, நமக்கெல்லாம்
வானகத்து அரசுரிமை தரும் பொருட்டு வானினின்று இறங்கி வந்த
அவ்வாண்டவன் உன்னைப் பகைத்து, உனது அரசைக் கவர்ந்தெடுக்க
எண்ணி இங்கு வந்தடைந்தான் என அரசியலுக்கு இழிவு ஏற்படுமாறு நீ
வீனே மனம் குழைந்து எண்ணத் தகுமோ?

      மன் அரசு இழந்தென வந்தது. பிலிப். 2 : 6 - 7.

 
                     48
எண்ணினு மவன்பெய ரிசைத்த நீர்மையான்
மண்ணினும் வானினு மன்ன ராட்சியாய்க்
கண்ணினு மினிதுயிர் கடிதல் பண்ணவோ
பண்ணினு மரசிய னிலைக்கும் பான்மையோ.
 
"எண்ணினும், அவன் பெயர் இசைத்த நீர்மையான்
மண்ணினும் வானினும் மன்னர் ஆட்சி ஆய்க்
கண்ணினும் இனிது உயிர் கடிதல் பண்ணவோ?
பண்ணினும், அரசியல் நிலைக்கும் பான்மையோ?

      "அவ்வாறு கவர வந்தானென்ற எண்ணம் ஏற்படினும் மண்ணிலும்
விண்ணிலும் மன்னராட்சி என்பது அவன் பெயரைச் சொல்லி ஆளும்
தன்மையதாய் அமைந்து கிடக்கையில் கண்ணினும், இனிய அவனது
உயிரைப் போக்குதல் செய்யத் தக்க செயலோ? அவ்வாறு செய்யினும்,
அதன் பின் உனது அரசியலும் நிலைக்கும் தன்மைதோ?