பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 280

     ஒளி பொருந்திய கதிராகிய கையை நீட்டி இருளை நீக்கிக் கதிரவன்
எழுந்து ஒளி செய்ய, நெருக்கமான தன் இதழ்களாகிய கையை நீட்டிய
தாமரை அக்கதிரை அருந்தி மலரும் தன்மைபோல், சூசை நீட்டிச் சொன்ன
கொழுமையான கதிராகிய அறிவுரைக்குச் செவியாகிய விரிந்த கையை
நீட்டிக் கேட்டவர்கள் விரும்பி அருந்தித் தெளிவு கொண்டனர்.

     அருந்துபு - 'அருந்தி' என்று பொருள்படும் 'செய்பு' என்னும்
இறந்தகால வாய்பாட்டு வினையெச்சம்.

 
                           167
விண்செய் செஞ்சுடர் விலகவெண் ணிலசுடர்த் தீப
மண்செய் மாக்களே வளர்த்தெனக் காப்பியக் கவிகள்
பண் செய் பாவகப் படாதுய ரிறைமையே யுணரா
வெண்செய் யீறிலா விறைவரை விகற்பித்தா ரென்றார்.
 
''விண் செய் வெஞ்சுடர் விலக எண் இல சுடர்ததீபம்
மண் செய் மாக்களே வளர்த்து என, காப்பியக் கவிகள்
பண் செய் பா அகப்படாது உயர் இறைமையை உணரா,
எண் செய் ஈறு இலா இறைவரை விகற்பித்தார்'' என்றார்.

     சூசையின் உரையைக் கேட்டுக் கொண்டிருந்தோர், ''வானகத்தில்
ஒளி செய்யும் ஞாயிறு மறையவும் மண்ணுலக மக்கள் எண்ணற்ற ஒளி
விளக்குகளை வளர்த்தது போல், காப்பியப் புலவர்கள் இசை நலம் வாய்ந்த
பாடலுக்குள் அகப்படாது உயர்ந்த உண்மையான தெய்வ இயல்பை
உணராமல், எண்ணிக்கை செய்து முடியாத தேவர்களை வேறுபடுத்திக்
காட்டினர்'' என்றனர்.

 
                     168
நதிதள் ளிக்கரை நாடிலா தலையினோ டுறல்போன்
மதிதள் ளிப்பலர் வாரியோ டிழிவுற வொழுகிக்
கதிதள் ளிக்கெடுங் கடவுள் ரிறைஞ்சின மின்னே
பொதிதள் ளிக்குணப் பொருவிலா னுணர்ந்தன மென்றார்.
 
''நதி தள்ளிக் கரை நாடிலாது அலையினோடு உறல் போல்,
மதி தள்ளிப் பலர் வாரியோடு இழிவு உற ஒழுகி,
கதி தள்ளி, கெடுங் கடவுளர் இறைஞ்சினம். இன்னே,
பொதி தள்ளி, குணப் பொருவு இலான் உணர்ந்தனம்'' என்றார்.