பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 288

படம் புனைந்து எழுதப் பட்ட பங்கயம் எழு வாய் பைம் பூந்
தடம் புனைந்து உறைந்து எஞ் ஞான்றும் சைவலம் சிவை
                                        கொள்ளாபோல்,
வடம் புனைந்து ஒளிறும் மார்பின் வடுப் புனைந்து இருண்ட நெஞ்சோடு
வடம் புனைந்து அனைத்தும் கேட்டு, ஒத்து ஒழுகிலான் வாமன்
                                        என்பான்.


     சித்திரப் படமாக எழுதப்பட்டது போன்ற தாமரைச் செடிகள்
வேரூன்றி நீரளவிற்கு எழுந்து நிற்கும் இடம் பரந்த பசும் பூம் பொய்கைக்கு
அழகு செய்வதுபோல் சேர்ந்து தங்கியிருப்பினும் பாசி ஒரு நாளும் வேர்
ஊன்றாத தன்மை போல், வாமன் என்பவனும் வெளியே அணிகலன்கள்
அணிந்து ஒளிரும் மார்போடும் உள்ளே பாவங்களை அணிந்து இருண்ட
நெஞ்சோடும் மற்றவரோடு அழகுக்காக அமர்ந்து அனைத்தையும்
கேட்டுக்கொண்டிருந்தும், அவற்றிற்கு ஒத்தவாறு நடக்க இயலாதவனானான்.

     உடம் - 'உடன்' என்பது எதுகை இசைப் பொருட்டு மாறி நின்றது.

 
             4
சிலைவளர் தடக்கை வீரன்
     செருமுகத் தசனி யன்னான்
கலைவள ருணர்விற் காமங்
     காய்முகத் தனுங்க மாழ்கி
யுலைவள ரழன்முன் பைம்பூ
     வுலந்தென மனதிற் சோர
விலைவளர் மகளிர் போரில்
     வீரமற் றெஞ்சு நெஞ்சான்.
 
சிலை வளர் தடக் கை வீரன்; செரு முகத்து அசனி அன்னான்;
கலை வளர் உணர்வின், காமம் காய் முகத்து அனுங்க மாழ்கி,
உலை வளர் அழல் முன் பைம் பூ உலந்தென மனதில் சோர,
விலை வளர் மகளிர் போரில் வீரம் அற்று எஞ்சும் நெஞ்சான்.

     அவ்வாமன் வில்லின் திறம் வளரும் பெரிய கைகளை உடைய வீரன்;
போர் முனையில் பகைவருக்கு இடி போன்றவன்; அறிவுக் கலை வளரும்
உணர்வினனாய் இருந்தும், காம இச்சை எரிக்கும் போது மனம் வாடி அறிவு
மயங்கி, அடுப்பிள் வளரும் நெருப்பின் முன் பசுமையான மலர் அழிதல்
போல மனத்திற் சோர்வுற்று, விலைக் கென்று காமத்தை வளர்க்கும்
வேசியரோடு தொடுக்க வேண்டிய போரில் வீர மற்று மெலியும் நெஞ்சை
உடையவனாய் இருந்தான்.