பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 289

            5
விதுமுகத் தெறித்த கற்றை
     மிடையிருள் மூழ்கிற் றன்ன
பொதுமுகத் துரைத்த யாவும்
     பொதுவறத் தனக்கென் றுள்ளி
மதுமுகத் துணர்த்து நூலான்
     மனத்தறம் விரும்பிப் பின்றை
முதுமுகத் துருத்த காம
     முதிர்வினை யாற்றா நொந்தான்.
 
விது முகத்து எறித்த கற்றை மிடை இருள் மூழ்கிற்று அன்ன,
பொது முகத்து உரைத்த யாவும் பொது அறத் தனக்கு என்று உள்ளி,
மது முகத்து உணர்த்தும் நூலால் மனத்து அறம் விரும்பி, பின்றை,
முது முகத்து உருத்த காம முதிர் வினை ஆற்றா நொந்தான்.

     சூசை பொதுப்படச் சொல்லிய யாவும் பொதுவென்று இல்லாமல்
தனக்கே சொல்லப்பட்டதாக வாமன் கருதி, தேனின் தன்மையாக
உணர்த்தும் அறிவு நூற் கருத்தைக் கேட்பதானால் தன் மனத்தும் அறத்தின்
மீது விருப்பங் கொண்டான். பின்னர், விண்மதி தன் முகத்தினின்று வீசிய
கதிர்க் கற்றைகள் செறிந்த இருளில் மூழ்கி மறைந்த தன்மைபோல,
நெடுநாட் பழக்க முகத்தால் மூண்டெழுந்த காம முதிர்ச்சியால் விளையும்
பாவ வினையைத் தாங்க இயலாது வருந்தினான்.

     ஆற்றா - ஆற்றாமல்: ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம்.

 
                6
பொறிகுலாய்க் கிடந்த மார்பிற்
     புண்ணிய மொருபா லோர்பால்
செறிகுலாய்க் கிடந்த காமஞ்
     செருப்பட நடுவிற் பட்ட
வெறிகுலாய்க் கிடந்த மாலை
     விகன்றென நெஞ்சஞ் சோர
நெறிகுலாய்க் கிடந்த சீல
     நிலைவிழைந் துரைக்க லுற்றான்.