பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 295

கொண்டு செய்யும் போரும், பகைவர் கொழுப்பைத் தாங்கிய தந்தமுள்ள
யானையைக் கொண்டு செய்யும் போரும், நிலப் பரப்பு மறையக் குதிரைகள்
பாய்ந்து தூசி படரும் போரும், மறைவு இல்லாது கற்றுக் கொண்ட மற்றப்
போர்களுமாகிய இவையெல்லாம் கடுமையாகி உனக்குத் தோன்றமாட்டா.

     கற்றுப் பழகிய இப்போர்கள் கடுமையாகத் தோன்றாமை போல்
காமப் போரும் நெறி அறிந்து பழகி முயல்வார்க்குக் கடினமாகாது என்பது
கருத்து. துரப்பு + அரசர் - எழகை நோக்கி 'அறசர்' எனத் திரிந்தது.

 
                  14
ஏர்விளை மணியின் சாய
     லெண்ணிய வளவிற் சொல்லுஞ்
சீர்விளை யினிய யாப்பிற்
     செய்யுளைப் பொருத்து வாருங்
கூர்விளை துறையி னன்னூற்
     கொளுமுன ரன்னார் தாமே
பார்விளை குன்றந் தாங்கல்
     பாடலி னினிய தென்பார்.
 
"ஏர் விளை மணியின் சாயல், எண்ணிய அளவில், சொல்லும்
சீர் விளை இனிய யாப்பில் செய்யுளைப் பொருத்துவாரும்,
கூர் விளை துறையின் நல் நூல் கொளும் முனர், அன்னார் தாமே
பார் விளை குன்றம் தாங்கல் பாடலின் இனியது என்பார்.

     "எண்ணிய அளவிலே அழகு விளங்குகின்ற மாணிக்கத்தின்
சாயலாகப் பிறர் பாடச் சொல்லும் செய்யுளைச் சீர் அமைப்போடு
பொருந்தும் இனிய யாப்பு முறைப்படி பாடும் புலவரும், கூர்மை பொருந்திய
யாப்புத் துறைக்குரிய நல்ல நூலைக் கற்றுக்கொள்ளும் முன்னர் அவ்வாறு
பாடுவோர், நிலத்தோடு பதிந்த மலையை எடுத்துச் சுமத்தல் செய்யுள்
இயற்றுவதினும் இனியது என்பர்.

     இன்ன பொருள் பற்றி இன்ன யாப்பில் இன்ன அளவிற்பாடுக
என்றவாறு பாடும் புலவன் ஆசு கவி எனப்படுவான். காளமேகப் புலவர்
ஆசுகவி பாடுதலில் வல்லவர். இது வீரமாமுனிவர் செய்யுளியற்றுவதில் தாம்
பெற்ற அனுபவத்தைக் கொண்டு கூறியதாகக் கொள்ளலாம்.