பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 305

     "கரிய மேகம் போல இருண்டு ஒளிரும் இயல்பு கொண்டு விளங்கும்
பெண்ணின் கூந்தல், மணம் பெருகுகின்ற அகிற் புகையூட்டிய பூமெத்தையில்
இருள் சிறந்த வகையிலே துயிலும் இடமென்று புலவர் புனைந்து கூறுவர்.
அவர் அறியார். போரில் மேம்பட்ட பகைவர் மறைந்திருந்து உயிரை
மாய்க்கும் காடே அது; கருமையான நஞ்சே அது; உயிரை உண்ணும்
கடுமையான எமனும் அதுவேயாம்!

 
            28
புருவ வில்லாற் கட்கணைகள்
     புண்பட் டுள்ளுயிரு
முருவ விட்டாற் பலநாளு
     முற்ற வுணர்வழிந்து
வெருவ நெஞ்ச முட்கலங்கி
     விளைத்த புண்காட்டி
வருவ தல்லா லிச்சமரின்
     மருளா தெவருண்டோ.
 
"புருவ வில்லால் கண்கணைகள் புண்பட்டு உள் உயிரும்
உருவ விட்டால், பல நாளும் உற்ற உணர்வு அழிந்து,
வெருவ நெஞ்சம் உள் கலங்கி, விளைத்த புண் காட்டி
வருவது அல்லால், இச்சமரின் மருளாது எவர் உண்டோ?

     "அம்மகளிர் தம் புருவமாகிய வில்லால் கண்ணாகிய அம்புகளை
உள்ளே கிடக்கும் உயிரும் புண்பட்டு ஊடுருவுமாறு ஏவி விட்டால், பல
நாளும் பழகிக் கொண்ட நல்லுணர்வும் அழிந்து, அஞ்சுமாறு நெஞ்சம்
உள்ளே கலங்கி, அக்கண்கள் விளைவித்த புண்களைக் காட்டிக்கொண்டு
வெளியே வருவதல்லாமல், இப்போரை நினைந்து மயங்காதவர் எவரும்
உண்டோ?

 
            29
கடலைக் கடைய வமிர்தமொடு
     கடுவும் பிறந்ததெனப்
படலைக் கதையா யறிந்ததலாற்
     பயனாய்க் கண்டதிலை
மடலைக் குடைய வூறியதேன்
     வதைத்த சொல்லமிர்தத்
துடலைக் கொலைசெய் துயிருணுநஞ்
     சுகும்பெண் வாய்மொழியே.