பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 312

              39
அள்ளிய விருளறு மலங்கல் வேலினோய்
தெள்ளிய விடத்திலுந் தெளிந்து நஞ்சுண
லுள்ளிய பேதைய ரொப்பச் சிந்தையி
வெள்ளிய வினையுளத் திவற லாயதேன்.
 
"அள்ளிய இருள் அறும் அலங்கல் வேலினோய்,
தெள்ளிய இடத்திலும் தெளிந்து நஞ்சு உணல்
உள்ளிய பேதையர் ஒப்ப, சிந்தையில்
எள்ளிய வினை உளத்து இவறல் ஆயது ஏன்?

     "செறிந்த இருளை அறுக்கும் ஒளியுள்ள வேலைத் தாங்கியவனே,
தெளிந்த இடத்திலும் துணிந்து நஞ்சை உண்ணக் கருதிய பேதையர்க்கு
ஒப்பாக, நீயே சிந்தையில் இகழ்ந்த செயலை மனத்தில் பற்றிக் கொள்வது
ஏன்?

 
                    40
நஞ்சமிழ் தென்றுநீ நக்கி னாலிமிழ்
விஞ்சமிழ் தாகுமோ வினைகொ ணல்லுயி
ரெஞ்சமிழ்ந் தியபுரை யியைந்து மாழ்கவு
நெஞ்சமிழ்ந் தியநசை நீக்கி லாவதேன்.
 
"நஞ்சு அமிழ்து என்று நீ நக்கினால், இமிழ்
விஞ்சு அமிழ்து ஆகுமோ? வினை கொள் நல் உயிர்
எஞ்சு அமிழ்ந்திய புரை இயைந்து மாழ்கவும்,
நெஞ்சு அமிழ்ந்திய நசை நீக்கு இல் ஆவது ஏன்?


     "நஞ்சை அமிழ்தமென்று நீ கருதி நக்கினால், அது இனிமை மிகுந்த
அமிழ்தமாய் மாறி விடுமோ? பாவ வினையைக் கொண்ட உன் நல்ல உயிர்
தன்பால் மிஞ்ச அமிழ்ந்திய மாசு பொருந்தி மயங்கக் கண்டும், உனது
நெஞ்சில் அமிழ்ந்து கிடக்கும் பாவ ஆசையை நீக்க முற்படாதது ஏன்?

 
                41
காதலே பாசமாய்க் கால்கை வீக்குத
லாதலே பிரிவுனக் கரிய தாமென்றாய்
காதலே பாசமாய்க் காதல் மிக்குளத்
தாதலே நாடொறு மிறுக்க லாவதேன்.