பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 313

"காதலே பாசமாய்க் கால் கை வீக்குதல்
ஆதலே, பிரிவு உனக்கு அரியது ஆம் என்றாய்;
காதலே பாசமாய், காதல் மிக்கு உளத்து
ஆதலே, நாள் தொறும் இறுக்கல் ஆவது ஏன்?

     "மாதர் மேலுள்ள காதலே கயிறாகக் கால் கைகளைக் கட்டுதலால்,
அதனை விட்டுப் பிரிதல் உனக்கு அரியதாகும் என்று சொன்னாய்;
அக்காதலையே நீ கயிறாகக் கொண்டு, காதல் உள்ளத்து மிகுதியாகும்
பொருட்டு, நீயே நாள்தோறும் இறுக்க முற்படுவது ஏன்?

 
                     42
கொந்தென விரகநோய் கொழுந்து விட்டெரிந்
தந்தில வழலவிப் பரிய தாமென்றாய்,
கொந்தென வெரிந்ததீத் தூண்டிக் கொண்டுநீ
யந்தில் நசைக்கற லீட்ட லாவதேன்.
 
"கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து,
அந்து இல அழல் அவிப்பு அரியது ஆம் என்றாய்;
கொந்து என எரிந்த தீத் தூண்டிக் கொண்டு,
நீ அந்து இல நசைக் கறல் ஈட்டல் ஆவது ஏன்?

     "கொத்துப் போல் காம நோய் கொழுந்து விட்டு எரிவதனால், முடிவு
இல்லாத அந் நெருப்பு அவிப்பதற்கு அரியதாகும் என்றாய்; கொத்துப்
போல் எரிந்த தீயை நீயே தூண்டி விட்டுக் கொண்டு, முடிவில்லாத ஆசை
என்னும் விறகை நீயே தேடிக் கொடுக்க முற்படுவது ஏன்?

     கொந்து - 'கொத்து' என்பதன் மெலித்தல் விகாரம். அந்து- 'அந்தம்'
என்ற சொல் கடைக்குறையாய் நின்றது.

 
                       43
பாங்கெழு மெழினலம் பயந்த வின்பினா
லாங்கெழு நசைவெறுப் பரிய தாமென்றாய்
பாங்கெழுங் காஞ்சிரப் பழன்வி ரும்பியுண்
டாங்கெழு மணங்குற வருந்த லாவதேன்.
 
"பாங்கு எழும் எழில் நலம் பயந்த இன்பினால்,
ஆங்கு எழும் நசை வெறுப்பு அரியது ஆம் என்றாய்;
பாங்கு எழும் காஞ்சிரப் பழன் விரும்பி உண்டு,
ஆங்கு எழும் அணங்கு உற வருந்தல் ஆவது ஏன்?