பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 318

"போது என மலர்ந்து எழில், போதின் வாடி அக்
கோது என மெலிவன மூப்புக் கொண்ட கால்.
ஈது என உணர்கிலாது, இன்பம் வேண்டுவர்
தீது என விளைத்த பின் தீயது எய்துவார்.


     "அழகுகள் எல்லாம் பூவைப் போல் மலர்ந்து, மூப்பு வந்த போது
மலர் போல் வாடி, அந்தச் சக்கை போல் மெலிவனவாம். இதுவே இயல்பு
என உணர இயலாமல், இன்பத்தையே வேண்டுவோர் தீது எனப்
பாவத்தை
விளைவித்த பின் அதற்கேற்ற தீய பயனையே அடைவர்.

 
                       52
இன்றுளார் நாளையே யிறப்ப ரன்றிமற்
றன்றுளார் விழைந்தவை யருகிற் போகிலா
நின்றுளாய்ச் செய்துகள் நெருங்கிப் பின்னுறச்
சென்றுளாய் விளைதுயர் செப்ப வோவென்றான்.
 
"இன்று உளார் நாளையே இறப்பர், அன்றி, மற்று
அன்று உளார் விழைந்தவை அருகில் போகிலா
நின்று, உள் ஆய்ச் செய் துகள் நெருங்கிப்
பின் உறச் சென்று, உளாய் விளை துயர் செப்பவோ?" என்றான்.

     "இன்று உயிருடன் உள்ளவர் நாளையே இறப்பர். அதுவுமன்றி, இன்று
உயிருடன் உள்ளவர் விரும்பியவை அன்று அவர் அருகில் தொடர்ந்து
போகாமல் நின்று, செய்த பாவம் மட்டும் உள்ளே நெருங்கிப் பொருந்திப்
பின் தொடர்ந்து செல்லும். அது அவ்வாறு சென்று உள்ளிருந்து
விளைவிக்கும் துயரம் சொல்ல இயலுமோ?" என்று சூசை முடித்துச்
சொன்னான்.

 
                   53
அளிமுகத் தினையவும் பலவு மாரிய
னொளிமுகத் துரைத்தவை யவனு ணர்ந்தபின்
வளிமுகத் தலையென மனத்த லைந்தலாற்
றெளிமுகத் துறுதியோர் துணிவு தேர்ந்திலான்.
 

"அளிமுகத்து இனையவும் பலவும் ஆரியன்
ஒளிமுகத்து உரைத்தவை அவன் உணர்ந்தபின்,
வளிமுகத்து அலைஎன மனத்து அலைந்து அலால்,
தெளி முகத்து உறுதி ஓர் துணிவு தேர்ந்து இலான்.