பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 320

              55
புண்முழு திறைஞ்சுங் கோட்டுப்
     புழுங்கிய களிற்றே றன்னோய்
விண்முழு திறைஞ்சும் வேதம்
     விலக்கிய தீமை நீங்கி
யுண்முழு திருளற் றூக்கத்
     தொழுகவே துணிந்தா லல்லான்
மண்முழு திவர்தீ தொவ்வா
     மலிதுயர் நிரையஞ் சேர்வாய்.
 

"புள் முழுது இறைஞ்சும் கோட்டுப் புழுங்கிய களிற்று ஏறு அன்னோய்,
விண்முழுது இறைஞ்சும் வேதம் விலக்கிய தீமை நீங்கி,
உள் முழுது இருள் அற்று, ஊக்கத்து ஒழுகவே துணிந்தால் அல்லால்,
மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய்.

     "கழுகு முதலிய பறவைகளெல்லாம் வணங்கும் கொம்போடு சினங்
கொண்ட ஆண் யானை போன்றவனே, விண்ணுலகமெல்லாம் வணங்கும்
மெய்வேதம் விலக்கிய தீமைகள் நீங்கி, உள்ளம் முழுவதும் இருள் அற்று,
ஊக்கத்தோடு நன்னெறியில் ஒழுகத் துணிந்தாலன்றி, மண்ணுலகம் முழுவதும்
நடக்கின்ற தீமைகளோடெல்லாம் ஒவ்வாத துயரம் நிறைந்த நரகத்தையே நீ
சென்று சேர்வாய்.

     புள் இறைஞ்சுதல் - யானை தனது கொம்பினால் பகைவரைக் குத்திக்
கொன்று தமக்கு விருந்து படைக்குமெனப் பறவைகளெல்லாம் அதனை
வணங்குகின்றன.

 
              56
தொல்லையிம் மருளி னூழ்த்த
     துகள்விடத் துணித லொன்றோ
வொல்லையிந் நசைநீங் காதே
     லூழலில் வேத லொன்றோ
வெல்லையில் விரண்டி லொன்றே
     யியாவருந் தவிரா தென்ன
வல்லையில் வுணர்விற் றேர்தி
     மாற்றலர் வணங்கும் வேலோய்.