பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 321

"தொல்லை இம்மருளின் ஊழ்த்த துகள் விடத் துணிதல்
ஒல்லை இந் நசை நீங்காதேல் ஊழலில் வேதல் ஒன்றோ,
ல்லை இவ் இரண்டில் ஒன்றே யாவரும் தவிராது என்ன,
வல்லை இவ் உணர்வில் தேர்தி, மாற்றலர் வணங்கும் வேலோய்!


     "பகைவர் வணங்கும் வேலை உடையவனே, ஒன்று பழமையான இந்த
மயக்கத்தால் முதிர்ந்த பாவத்தைவிட்டொழிக்கத் துணிதல், ஒன்று உடனே
இந்த ஆசை நீங்காதாகில் என்றும் நரகத்தில் வேதல் - எல்லை காட்டிய
இவ்விரண்டில் ஒன்றே யாவர்க்கும் வரத் தவறாது என்று அறிந்து,
விரைவிலேயே இக் கருத்தில் ஒன்றைத் தேர்ந்துகொள்வாய்.

 
             57
மீய்முகத் துடையிற் றோன்றும்
     விசும்புசூழ் வரையிற் றூங்கித்
தூய்முகத் தலைக ளோட்டித்
     துள்ளிவீ ழருவி போல
வேய்முகத் தினிமை காட்டி
     விரைவிலோ டிளமை நம்பேல்
காய்முகத் ததிர்கால் வீசக்
     காய்முதல் வீழு மென்றான்.
 
"மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி,
தூய் முகத்து அலைகள் ஓட்டித் துள்ளி வீழ் அருவி போல,
வேய் முகத்து இனிமை காட்டி விரைவில் ஓடு இளமை நம்பேல்,
காய் முகத்து அதிர்கால் வீசக் காய்முதல் வீழும்" என்றான்.

     "மேலே வானிடத்து உடை போல் தோன்றும் மேகம் சூழ்ந்த
மலையில் தொங்கி, தூய முகத்தோடு அலைகள் பாயச் செய்து துள்ளி
விழும் அருவி போல, அழகு செய்கின்ற முகத்தால் காம இன்பத்தைக்
காட்டி விரைவில் ஓடி மறையும் இளமையை நம்பாதே. மேலும், சினத்தோடு
அதிரும் காற்று வீசுகையில் காய் முதலாய் அறுந்து வீழும்" என்று சூசை
முடித்தான்.