பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 322

     இது இளமையில் காமத்து ஆழ்ந்து முதுமையில் தவம் செய்து
நற்பேறு அடையலாம் என்பார்க்கு, இளமை நிலையற்றது எனவும், பேய்க்
காற்றால் காய் உதிர்வது போல் இளமையிலேயே சாவு நேர்தல் உண்டு
எனவும் உணர்த்தியது. 'அன்றறிவாம் யாமிளையம்' எனத் தொடங்கும்
நாலடியாரில், (19) 'தீவளியால் நற்காய் உதிர்தலும் உண்டு' என்றதும் காண்க.
'மீய்' என்ற விடத்து யகரம் எதுகைப் பொருட்டு விரித்தல் விகாரமாய்
வந்தது.

 
          58
காய்நர கென்ற போழ்திற்
     கணங்கொடு நின்றார் சொல்வார்
தீய்நர கென்ப தல்லாற்
     றீநர கெந்நா டெப்பால்
நோய்நர கரசர் பேயோ
     நுகர்ச்சியு நிலையும் யாதோ
போய்நர குறைவர் யாரோ
     புலமையோய் விரித்துச் சொல்வாய்.
 
காய் நரகு என்ற போழ்தில் கணம் கொடு நின்றார் சொல்வார்:
"தீய் நரகு என்பது அல்லால், தீ நரகு எந்நாடு? எப் பால்?
நோய் 'நரகு அரசர் பேயோ? நுகர்ச்சியும் நிலையும் யாதோ?
போய் நரகு உறைவர் யாரோ? புலமையோய், விரித்துச் சொல்வாய்.

     காயும் நரகம் என்று சூசை குறிப்பிட்ட அப்போது அங்குக்
கூட்டமாய்த் திரண்டு நின்றோர் அவனை நோக்கிப் பின் வருமாறு
சொல்வர்: "எரிக்கும் நரகம் என்று பெயரளவில், அறிந்ததேயல்லாமல்,
தீயுள்ள அந்நகரம் எந்த நாட்டில் உள்ளதோ? அதன் எப் பகுதியில்
உள்ளதோ? துன்பம் தரும் நரகத்திற்கு அரசர் பேய்களோ? அங்குள்ள
நுகர் பொருள்களும் நிலைமையும் யாதோ? அந் நரகத்திற் போய்த்
தங்குவார் யாரோ? அறிவு மிக்கவனே, இவற்றையெல்லாம் நீ விளக்கிச்
சொல்வாய்.

 
               59
வீய்முதிர் மதுவிற் றீஞ்சொல்
     விரித்தநூற் கல்வி மிக்கோய்
தீய்முதி ருணர்விற் றீய
     செருக்கொடெம் முயிரை யுண்ணும்