பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 324

     குளிர்ச்சி கொண்ட அழகிய மலர் போன்ற செந்நிற வாயை
உடையவனாகிய சூசை அவர்களை நோக்கி, "வாழ்விற்கு இனிமை தருவன
பற்றியே கேட்டீர்கள். இந்நாளில் நீங்கள் அடைந்த உணர்வினால் சினந்து
வேகும் நரகத்தில் கீழே சென்று புகுந்து அங்குள்ள முதிர்ந்த துன்பங்களை
உணர்ந்து மனம் கூசுவீர்களாயின், இறக்குங் காலத்து அந்நெருப்பை
அடையாமல் கனிந்து மகிழ்வீர்கள்" என்று முதலிற் கூறி, பின்னும் இதனைச்
சொன்னான்.

 
             61
ஆடிய கடவு ளன்றி
     யனைத்துமே படைப்புண் டாகி
நீடிய வுலக மூன்று
     நிமலனா மொருவன் செய்தான்
கோடிய தெவையுங் கோதாற்
     கோடிய தன்றி முற்பால்
வாடிய குறையொன் றின்றி
     வனப்புற முடித்த தன்றோ.
 
"ஆடிய கடவுள் அன்றி அனைத்துமே படைப்பு உண்டாகி,
நீடிய உலகம் மூன்றும் நிமலனாம் ஒருவன் செய்தான்.
கோடியது எவையும் கோதால் கோடியது அன்றி, முற்பால்
வாடிய குறை ஒன்று இன்றி வனப்பு உற முடித்தது அன்றோ?

     "அனைத்தையும் வென்ற கடவுள் ஒருவனே தன்னியல்பாக
இருப்பவனன்றி, மற்று அனைத்துமே படைப்பினால் உண்டாகியவை. எம்
மாசும் அணுகாதவனாகிய அவ்வொருவனே பரந்த மூன்று உலகங்களையும்
படைத்தான். அவன் படைப்பில் தோணியது எதுவும் தன்தன் பாவத்தால்
கோணியதேயன்றி, முதற் படைப்பின்போது வாட்டமுள்ள குறை ஒன்றுமே
யின்றி அவனால் அழகுற முடிக்கப் பெற்றதே அன்றோ?

 
          62
கட்புலத் துருவிற் புல்லாக்
     கவினலந் தீட்டி வாய்ந்த
வுட்புலத் துடல மில்லா
     வுயிரென விழுப்ப மோங்க
மட்புலத் திணையொன் றில்லா
     மனங்களை எண்ணி னாதன்
விட்புலத் திறைவற் சூழும்
     வீரரென் றமைத்தா னென்றான்.