பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 325

"கண் புலத்து உருவில் புல்லாக் கவின் நலம் தீட்டி, வாய்ந்த
உள் புலத்து, உடலம் இல்லா உயிர் என விழுப்பம் ஓங்க,
மண் புலத்து இணை ஒன்று இல்லா மனங்களை எண்இல் நாதன்
வீண் புலத்து இறைவற் சூழும் வீரர் என்று அமைத்தான்" என்றான்.


     "கண்ணுக்குப் புலப்படும் உருவத்தோடு பொருந்தாத அழகு நலத்தைத்
தீட்டி, தகுந்த உள்ளம் என்னும் புலனோடு கூடி, உடல் இல்லாத உயிர்கள்
என்னும் சிறப்பு ஓங்க, மண்ணுலகத்தில் ஒப்பு ஒன்றும் இல்லாத எண்ணற்ற
மன உயிர்களை ஆண்டவன் விண்ணுலகத்தில் இறைவனைச் சூழ்ந்து நிற்கும்
வீரரென்று படைத்தான்" என்று சூசை சொன்னான்.

 
          63
கடவுளர் தேவ ரென்னுங்
     களிகெழுங் குலமே தானோ
தடவுளர் வணங்கு நன்னூற்
     றகுதியோ யென்ன வாமன்
முடவுளர் பறக்க வெஃகு
     முயலெனப் பித்தர் காட்டு
மடவுளர் மருளென் கேண்மி
     னறைகுது மென்றான் சூசை.
 
"கடவுளர் தேவர் என்னும் களி கெழுங் குலமே தானோ,
தடவு உளர் வணங்கும் நல் நூல் தகுதியோய்?" என்ன வாமன்,
முடவு உளர் பறக்க வெஃகும் முயல் என, பித்தர் காட்டும்
அடவு உளர் மருள் என்? கேண்மின், அறைகுதும்" என்றான் சூசை.

     அது கேட்ட வாமன் "பெருமையுள்ளோர் வணங்கும் நல்ல
நூல்களைக் கற்ற தகுதி வாய்ந்தவனே, அவ்வீரர் யாமெல்லாம்
கடவுளரென்றும் தேவரென்றும் குறிப்பிடும் களிப்பு மிகுந்த குலத்தைச்
சேர்ந்தவர்தாமோ?" என்று வினவினான். சூசை அவனை நோக்கி, "முடம்
கொண்டவர் பறக்க விரும்பும் முயற்சி போல, பித்தர் காட்டும் வழியைத்
தடவும் மயக்கம் ஏன்? அதனைச் சொல்வோம், கேளுங்கள்" என்றான்.