பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 327

கானுறை யுலகி னாங்கொள்
     கசடற வரந்தந் தோம்ப
மானுறை வளமில் லாராய்
     வணக்குரித் தேவ ரல்லார்.
 
"வான் உறை குலத்தோர் ஆகி, வரங்களும் வயமும் மிக்கார்,
கோன் உறை கோயில் வைகி, கோக் கணம் என்னத் தோன்றின்,
கான் உறை உலகில் நாம் கொள் கசடு அற வரம் தந்து ஓம்ப
மான் உறை வளம் இல்லாராய், வணக்கு உரித் தேவர் அல்லர்.

     "அவ்வீரர் வானத்தில் வாழும் இனத்தவராய், பெற்றவரங்களும்
வலிமையும் மிக்கவராய், கடவுள் வாழும் மாளிகையில் தங்கியிருந்து, அரசர்
கூட்டம் போலவே தோன்றினும், காடு சூழ்ந்த இவ்வுலகில் நாம் கொண்ட
பாவக் கசடு நீங்குமாறு தாமே வரந்தந்து காத்தல் போன்று தம்முட்
கொண்ட மாட்சிகொண்ட வளம் இல்லாதவராய் இருத்தலினால்,
வணக்கத்திற்கு உரிய தேவர் அல்லர்.

     எனவே, படைப்புப் பொருளாகிய வானோர் அம்முறையில் நம்
வணக்கத்திற்கு உரியவராயினும், தேவர் என்ற பெயருக்கும் கடவுளென்ற
வணக்கத்திற்கும் உரியவரல்லர் என்க.

 
          66
வரந்தருந் தன்மைத் தெல்லா
     வையகத் தொன்றா நாதன்
புரந்தருங் குணந்தன் பாலாய்ப்
     புகன்றவ னேவுந் தன்மைத்
துரந்தரு முறுதி சொல்லி
     யுதவியவரங்கள் கேட்டுச்
சுரந்தருந் துயரிற் றேற்றுந்
     துணைசெயல் வானோர் பாலே.
 
"வரம் தரும் தன்மைத்து எல்லா வையத்து ஒன்று ஆம் நாதன்
புரந்த அருங் குணம் தன் பாலாய், புகன்று அவன் ஏவும் தன்மைத்து
உரம் தரும் உறுதி சொல்லி, உதவிய வரங்கள் கேட்டுச்
சுரந்து, அருந் துயரில் தேற்றும் துணை செயல் வானோர் பாலே.