பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 328

     "எல்லா உலகத்திலும் ஒன்றாய் நிற்கும் ஆண்டவன் வரம் தரும்
தன்மையாக உயிர்களைப் பேணும் அரிய குணம் தன்னையே சார்ந்ததாகக்
கொண்டிருக்க, அவன் சொல்லி ஏவும் தன்மைக்கு ஏற்ப வலிமை தரும்
உறுதி சொல்லியும், அவன் உதவிய வரங்களைக் கேட்டு வந்து சுரந்து
கொடுத்தும், அரிய துயரில் தேற்றும் துணையைச் செய்தல் மட்டுமே
வானவரைச் சார்ந்ததாம்.

     புரந்த + அரும் - 'புரந்தவரும்' என வர வேண்டியது தொகுத்தல்
விகாரமாய்ப் 'புரந்தரும்' என நின்றது

 
           67
விண்ணெனும் பதியோ ராகி
     மேவிநீ ருரைக்குந் தன்மை
மண்ணெனும் பதியோர்க் கன்றி
     வானவர்க் கொவ்வாப் பாலாய்க்
கண்ணெனு மிமையா ரென்னுங்
     கடிமலர் வாடா தென்னும்
பெண்ணெனு மாணு மென்னும்
     பெயர்தகா துருவி லார்க்கே.
 
விண் எனும் பதியோர் ஆகி, மேவி நீர் உரைக்கும் தன்மை
மண் எனும் பதியோர்க்கு அன்றி, வானவர்க்கு ஒவ்வாப் பால் ஆய்,
கண் எனும், இமையார் என்னும், கடி மலர் வாடாது என்னும்,
பண் எனும், ஆணும் என்னும் பெயர் தகாது உரு இலார்க்கே.

     "வானவர் விண்ணுலகத்தோ ராகையால், விரும்பி நீங்கள் அவர்கட்கு
உரைக்கும் இயல்பெல்லாம் மண்ணுலகத்தவர்க்குப் பொருந்துமேயன்றி,
வானவர்க்கு ஒவ்வாத தன்மையாகும். எனவே, கண் உடையவர் எனவும்,
இமை கொட்டார் எனவும், அணிந்த மணமலர் வாடாது எனவும், சிலர்
ஆண் எனவும், வேறு சிலர் பெண் எனவும் சொல்லும் குறியெல்லாம்
உருவம் இல்லாத வானவர்க்குப் பொருந்தாது.

     'கண்ணிமைத்தலால் .. ... ..வண்ண மலர்மாலை வாடுதலால் என்ற
நளவெண்பா (153) வரிகள் இங்கு எதிரொலிக்கின்றன