பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 331

               71
ஒக்கள வகன்று மின்மீ
     னொத்திரா புறத்து நீக்கித்
தொக்கள வகன்ற சீர்கொள்
     சுடருல குரிமை யங்கட்
புக்கள வறித லன்றிப்
     புன்கரத் துளருந் தன்மை
நக்கள வஃகு மிச்சீர்
     நயத்தள வுணர்த லாமோ.
 
"ஒக்க அளவு அகன்று, மின் மீன் ஒத்து இரா புறத்து நீக்கி,
தாக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண்
புக்க அளவு அறிதல் அன்றி, புன் கரத்து உளரும் தன்மை,
நக்கு அளவு அஃகும் இச்சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ?

     "ஒன்றாக அளவெல்லாம் கடந்து, மின்னுகின்ற விண் மீன்களைத் தன்
அழகுக்கு ஒத்து இரா என்று புறத்தே தள்ளி, அளவில்லாத சிறப்பெல்லாம்
தொகுதியாகக் கொண்டுள்ள ஒளியுலகமாகிய மோட்சத்திற்கு உரிய
தன்மையை அங்குப் புகுந்த அளவிலே அறிதல் கூடும். அவ்வாறன்றி,
கண்ணாற் காணக் கூடியதைக் கறையுள்ள கையினால் தடவிக் காண
முற்படுவதுபோல, நக்கும் அளவிற்கும் குறையும் இவ்வுலகச் சிறப்பு
நயங்களை அளவுகோலாகக் கொண்டு உணரக் கூடுமோ?

     ஒக்களவு, புக்களவு என்பன தொகுத்தல் விகாரங்கள்.

 
                     72
உள்ளுமா றகன்ற வாழ்வுய்த்
     தும்பரைப் படைத்த பின்னர்த்
தெள்ளுமா றகன்றாங் காரஞ்
     சிலருறீஇ யிறைவ னேவிக்
கொள்ளுமா றகன்ற தீமை
     குணித்தள வுரைத்த சாபத்
தெள்ளுமா றகன்ற வானோ
     ரெரியுழிப் பேய்க ளானார்.