பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 332

"உள்ளும் ஆறு அகன்ற வாழ்வு உய்த்து உம்பரைப் படைத்த பின்னர்,
தெள்ளும் ஆறு அகன்று ஆங்காரம் சிலர் உறீஇ, இறைவன் ஏவிக்
கொள்ளும் ஆறு அகன்ற தீமை குணித்த அளவு உரைத்த சாபத்து,
எள்ளுமாறு அகன்ற வானோர் எரி உழிப் பேய்கள் ஆனார்.


     "கருதும் தன்மை கடந்த வாழ்வு தந்து இறைவன் வானவரைப்
படைத்த பின்னர், அவருட் சிலர் தெளிந்த வழியை விட்டகன்று ஆங்காரம்
கொண்டனர். இறைவன் தம்மை ஏவிக் கொண்டுள்ள வழியை விட்டகன்ற
தீமையைக் கருதிய அளவிலேயே தந்த சாபத்தால், இகழ்ச்சி உறுமாறு
அவனை விட்டகன்ற அவ்வானவர் நரக நெருப்பினிடையே பேய்களாக
விழலானார்.

 
             73
பேய்வினை வெருவக் கண்டப்
     பேய்கள்செய் தவனா ரென்றீர்
தூய்வினை வயத்தோன் செய்த
     தொழில்கெட வுணர்ந்த பாவம்
போய்வினை கொணர்ந்து பேய்தம்
     புழுங்கினஞ் செய்த தென்னாத்
தீய்வினை யுளத்துட் புக்காற்
     செய்பகை யறிதீ ரென்றான்.
 

"பேய் வினை வெருவக் கண்டு, 'அப்பேய்கள் செய்தவன் ஆர்?' என்றீர்.
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம்
போய் வினை கொணர்ந்து, பேய்தம் புழுங்கு இனம் செய்தது என்னா,
தீய் வினை உளத்துள் புக்கால் செய் பகை அறிதீர்" என்றான்.


     "பேய்கள் செய்யும் வினையை அச்சத்தோடு நோக்கி, 'அப்பேய்களைப்
படைத்தவன் யார்?' என்று வினவினீர். தூய வினையின் வயப்பட்டவனாகிய
ஆண்டவன் செய்த தொழில் கெடுமாறு, அவ்வானவர் மனத்துள் கருதிய
பாவமே போய்த் தீவினையைக் கொணர்ந்து, சினந்து கொண்ட பேய்களின்