பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 336

                           79
திரையுடுத்த பாரகட்டுச் சேண்படர்தாழ் குழிதோண்டிக்
கரையுடுத்த கடல்பொங்கிக் கடந்தெழுவ போலலைகொண்
டுரையுடுத்த நிகர்கடந்த யூழித்தீக் குடிவைகப்
புரையுடுத்த வுருக்கொடுபேய்ப் புதைத்தலறு நரகன்றோ.
 

"திரை உடுத்த பார் அகட்டுச் சேண்படர் தாழ் குழி தோண்டி,
கரை உடுத்த கடல் பொங்கிக் கடந்து எழுவபோல் அலைகொண்டு,
உரை உடுத்த நிகர் கடந்த ஊழித்தீ குடி வைக,
புரை உடுத்த உருக்கொடு பேய்ப் புதைத்து அலறும் நரகு அன்றோ?


     "திரையை உடைய கடல் சூழ்ந்த உலகத்தின் வயிற்றுக்குள்
நெடுந்தொலைவு செல்கின்ற ஆழமான குழியைத் தோண்டி, கரை சூழ்ந்த
கடல் பொங்கிக் கடந்து எழுவன போன்ற பெரிய நெருப்பு அலைகள்
கொண்டு, சொல்லால் புனைந்துரைக்கக் கூடிய ஒப்பற்ற ஊழித் தீ
குடிகொண்டிருக்க, பாவத்தை ஆடையாக உடுத்த உருவத்தைக் கொண்ட
பேய்களை இறைவன் ஆழ்த்தியதனால் அவை அலறும் தன்மை வாய்ந்தது
நரகம்.

 
                   80
இடிகடவ ழோதைமறுத் தெரிந்தயர்வோ ரோதையெழக்
குடிகடவ ழிடும்பையொடு கொடியதெலா மொய்த்தடர
நொடிகடவழ் போதுபல நூறாண்டென் றுணர்ந்தலறக்
கடிகடவ ழிருடவழ்தீக் காணியெனு மருஞ்சிறையே.
 
"இடிகள் தவழ் ஓதை மறுத்து எரிந்து அயர்வோர் ஓதை எழ
குடிகள் தவழ் இடும்பையொடு கொடியது எலாம் மொய்த்து
நொடிகள் தவழ் போது பல நூறு ஆண்டு என்று அடர உணர்ந்து அலற,
கடிகள் தவழ் இருள் தவழ் தீக் காணி எனும் அருஞ் சிறையே.

     "அங்கு இடிகள் தவழ்ந்து செல்லும் ஓசையையும் அடக்கி எரிந்து
அலறுவோர் ஓசை எழும். குடிகளாகத் தவழ்ந்து திரியும் துன்பங்களோடு
கொடியது எல்லாம் மொய்த்து நெருங்கிக் கிடக்கும். நொடி நொடியாகத்
தவழ்ந்து செல்லும் நேரம் பல நூறு ஆண்டுகள் என்று உணர்ந்து
அங்குள்ளோர் அலறுவர். பேய்கள் தவழ இருளும் தவழ்ந்து செல்லும்
நெருப்பு நிலம் எனப்படும் தாங்குதற்கு அரிய சிறையே அந்நரகம்.