பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 337

                         81
கண்மல்குந் துயர்பனித்த கலுழியவி யாக்கனலாய்
மண்மல்குந் துயர்வெள்ளம் வாழ்வுருவோ யினிதென்ப
வுண்மல்குந் துயராற்றா துளைந்தழத்தா மற்றுயிரைப்
புண்மல்குந் துயர்ப்படுத்தல் புதவுடத்துப் பேயரசே.
 

"கண் மல்கும் துயர் பணித்த கலுழி அவியாக் கனலாய்,
'மண் மல்கும் துயர் வெள்ளம் வாழ்வு உருவாய் இனிது'! என்ப
உள் மல்கும் துயர் ஆற்றாது உளைந்து அழத் தாம், மற்று உயிரைப்
புண் மல்கும் துயர்ப் படுத்தல் புதவு இடத்துப் பேய் அரசே.


     "துயரினால் வாடிய கண்ணில் பெருகும் கண்ணீரும் அவியாத
நெருப்பாய் மாற, அங்குள்ளோர், 'மண்ணில் பெருகுகின்ற துன்ப வெள்ளம்
வாழ்வு போன்ற தோற்றத்தோடு இனியது!' என்று சொல்வர். தாம்
உள்ளத்தில் பெருகிய துயரம் தாங்காது வருந்தி அழ, அவ்வுயிர்களைப்
புண் பெருகும் துயரத்துக்கு மேன் மேலும் ஆளாக்குதலே நரகத்தில் பேய்
புரியும் ஆட்சி ஆகும்.

 
                           82
ஓரென்பான் றனையேத்தா ரொன்றாமெய்ச் சுருதிவழி
சீரின்பா னடவாதார் சினங்காமங் களவு கொலை
பாரின்பா னச்சியடும் பாவமுடித் தவரெல்லாஞ்
சூரின்பா னரகெய்திச் சோகினத்தோ டுளைந்தெரிவார்.
 

"ஓர் என்பான் தனை ஏத்தார், ஒன்று ஆம் மெய்ச் சுருதி வழி
சீரின்பால் நடவாதார், சினம் காமம் களவு கொலை
பாரின்பால் நச்சி அடும் பாவம் முடித்தவர் எல்லாம்
சூரின்பால் நரகு எய்தி, சோகு இனத்தோடு உளைந்து எரிவார்.


     "ஒப்பற்ற ஒருவன் எனப்படும் கடவுளை வணங்காதவர், ஒன்றே ஆன
மெய் வேதம் காட்டிய வழியில் சீராக நடவாதவர், சினம் காமம் கொலை
களவு முதலியவற்றை விரும்பிச் சாவு தரும் பாவம் செய்தவர் எல்லாம்
துன்பத் தலமாகிய நரகத்தை அடைந்து, பேய் இனத்தோடு தாமும் வருந்தி
எரிவர்.