பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 340

வேய்நிலை வரையை நக்கினா லத்தீ
     வெந்துகண் ணிமைக்குமுன் னுருகக்
காய்நிலை கொண்டு நாரலை நிலையிற்
     காய்கொழுந் தெழுந்தெரி தீயே.
 

"நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள்
                              பனிப்பவே, ஊழித்
தீய் நிலை என்றால், உதவிய இன்ன தீ என உணர்தலும்
                              வேண்டா.
வேய் நிலை வரையை நக்கினால் அத் தீ வெந்து, கண்
                              இமைக்கும் முன் உருகக்
காய் நிலை கொண்டு, நாரலை நிலையின் காய் கொழுந்து
                              எழுந்து எரி தீயே.


     "நோயெல்லாம் நிலை கொண்ட நரகம் தன்னுட் கொண்டுள்ள பல
துன்பங்களையும் கருதினாலே உள்ளம் நடுங்கும். அங்குள்ளது ஊழித்தீயின்
தன்மையது என்றதும், மனிதர்க்கு உதவியாய் அமைந்த தீயைப் போன்ற
தென்று எண்ண வேண்டாம். அந்த நெருப்பு மூங்கில் நிலைபெற்ற மலையை
நக்கினதும் அம்மலை வெந்து, கண் இமை கொட்டுமுன் உருகத்தக்க வெப்ப
நிலை கொண்டு, நரகத்தில் நிலையாகக் காய்ந்து கொழுந்து விட்டு எரியும்
நெருப்பாகும்.

     நரகத்தைக் குறிக்கும் 'நராலை' என்ற பெயர் செய்யுள் ஓசைப்
பொருட்டு 'நாரலை' என நின்றது.

 
              87
ஆதிதன் னருளித் தழலைநல் லவர்க்கு
     மாதர வுதவியிற் படைத்து
நீதிதன் மலிந்த சினத்திறங் காட்டி
     நெறிதவிர் தீயரைத் தீய்க்கப்
பூதிதன் னழலைப் படைத்தன னென்றாற்
     பொருவவிவ் விருதழ னோக்கிற்
சோதிதன் முகத்து மின்மினி போன்றச்
     சுடர்முகத் திச்சுடர் நிலையே.