பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 344

     "தூய்மை நிறைந்த மலர் பரப்பிய மெல்லிய படுக்கையை விரித்து,
சுற்றிலும் அகிலின் நறுமணப் புகையைத் தோயவிட்டு அதன்மேல் படுக்கும்
செல்வம் உடையோர் விளைவித்த தம் பாவ வினையினால் நரகத்தை
அடைந்து, அங்குத்தீ வளரும் சூளையில் புதைக்கப்பட்ட போது கால்
கைகளைத் திருப்பவும் நீட்டவும் இயலாத பெருகும் துன்பத்தின் தன்மையை
நூல் கற்று வளர்ந்த சொல்லாலும் எண்ணி நான் சொல்லத் தெளியேன்.

     மீ, தீ என்பன எதுகைப் பொருட்டு யகரம் பெற்று நின்றன. சுள்ளை
- சூளை என்ற சொல்லின் திரிபு.

 
                    92
மீடைந்துதாந் தம்முட் டுயர்செய வொருபான்
     மிடைந்தன குணுக்கின மொருபா
லடைந்துதா முடற்றிச் சீறிய பகையோ
     டாகுலக் கடல்கரை யனைத்து
முடைந்துபாய் வெள்ள முனிவொடு தீயோ
     ருடல்பதைத் துளைந்ததிர்ந் தலற
விடைந்துபாய் வெறிகள் படுத்திய பீடை
     விட்டொழி யாதெரிந் துளைவார்.
 
"மிடைந்து தாம் தம்முள் துயர் செய ஒரு பால், மிடைந்தன குணுங்கு
                                        இனம் ஒரு பால்
அடைந்து தாம் உடற்றிச் சீறிய பகையோடு, ஆகுலக் கடல் கரை
                                        அனைத்தும்
உடைந்து பாய் வெள்ள முனிவொடு தீயோர் உடல் பதைத்து உளைந்து
                                        அதிர்ந்து அலற,
விடைந்து பாய் வெறிகள் படுத்திய பீடை விட்டு ஒழியாது, எரிந்து
                                        உளைவார்.

     "ஒரு பக்கம் அத்தீயோர் மேற் கூறியவாறு நெருங்கித் தமக்குள்
தாமே துயர் செய்து கொண்டிருக்க, மற்றொரு பக்கம் பேய் இனம் நெருங்கி
வந்தடைந்து தாமும் சினந்து சீறிப் பகை செய்யும். அதனால், துன்பம்
என்னும் கடல் கரையெல்லாம் உடைந்து உள்ளே பாய்கின்ற வெள்ளம்
போன்ற வெறுப்போடு தீயோர் உடல் நடுங்கி வருந்தி அதிர்ந்து அலறுவர்.
அப்பொழுதும், சினந்து பாயும் பேய்கள் படுத்திய துன்பம் விட்டு ஒழியாமல்,
எரிந்து வருந்துவர்.