பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 346

"வாச நெய் என்ன உருக்கிய ஈயம் வலித்து உடல் ஒருங்கு உடன் பூசி,
கோசர நீர் என்று அழல் புனல் ஆட்டி, கொந்து எரிச் சய மெய்ப்பை
                                              போர்த்து,
பூசணம் ஆக நச்சு அரவு அணிந்து, 'பூந் தவிசு உச்சி வாழ்க!' என்ன
வீசு அழல் விரிந்த மஞ்சம் மேல் இருத்தி விரகரை வருத்துவது
                                               அன்றோ.


     "மணமுள்ள நெய் போல உருக்கிய ஈயத்தை அழுத்தி உடல்
முழுவதும் ஒன்றாகப் பூசி, நறுமணமலர் நீர் என்று நெருப்பாகிய நீரால்
குளிப்பாட்டி, கொத்தான நெருப்பை வெற்றிச் சட்டையாக உடம்பில்
போர்த்தி, அணிகலனாக நஞ்சுள்ள பாம்மை அணிந்து, 'அழகிய
ஆசனத்தின் உச்சியில் வாழ்வீராக!' என்று நெருப்பு வீசும் விரிந்த கட்டில்
மேல் இருத்திக் காமுகரைப் பேய் வருத்துவதாகும்.

 
                  95
சொறிபட ரரியு முரகமு மலமுஞ்
     சுடச்சுட வமிர்தென வூட்டி
வெறிபடர் மலர்ப்பூந் துகில்கொடு பைம்பூ
     மெல்லுட னீவுது மென்னப்
பொறிபடர் கொழுந்திற் கனன்றகூ னிரும்பாற்
     புண்பட வுடலெலாங் கீறிச்
செறிபடர் விரக நோய்மருந் தென்னச்
     சினந்தணங் கியற்றுமாங் கடியே.
 
சொறி படர் அரியும் உரகமும் மலமும் சுடச்சுட அமிர்து என ஊட்டி,
'வெறி படர் மலர்ப் பூந் துகில் கொடு பைம்பூ மெல் உடல் நீதுவும்'
                                             என்னப்
பொறி படர் கொழுந்தின் கனன்ற கூன் இரும்பால் புண்பட உடல்
                                             எலாம் கீறி,
செறி படர் விரக நோய் மருந்து என்னச் சினந்து அணங்கு இயற்றும்
                                             ஆம் கடியே.

     "சொறி படர்ந்த தவளையும் பாம்பும் மலமும் சுடச்சுட அமிழ்தம்
என்று ஊட்டி, 'மணம் படரும் மலர் போன்ற அழகிய ஆடையால்
பசுமையான பூப் போன்ற மெல்லிய உடலைத் தடவிக் கொடுப்போம்,'
என்று