பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 351

                103
கைத்த யாவையுங் காய்கடு வும்புழு
மொய்த்த வூத்தையு முற்றிய பூதியுந்
துய்த்த வாயிரத் தஞ்சொரி யத்துமித்
துய்த்த தீயுமிழ்ந் தோவிய ரற்றுவார்.
 
"கைத்த யாவையும், காய் கடுவும், புழு
மொய்த்த ஊத்தையும், முற்றிய பூதியும்
துய்த்த வாய் இரத்தம் சொரியத் துமித்து,
உய்த்த தீ உமிழ்ந்து, ஓவி அரற்றுவார்.

     "வாய்ப் பாவஞ் செய்தோர் கசப்பான யாவற்றையும், அழன்ற
நஞ்சையும், புழு மொய்த்த ஊத்தையையும், முதிர்ந்த கெடுநாற்றமுள்ள
பொருள்களையும் தண்டனையாக நுகர்ந்த வாய் இரத்தம் சொரிய
அறுக்கப்பட்டு, பேய் உள்ளே செலுத்திய தீயை உமிழ்ந்து, சோர்ந்து
புலம்பிக்கொண்டிருப்பர்.

 
                104
காவிக் கண்வழி காமமுண் டாரென
வாவிக் கண்மலி வண்டுறழ் மொய்த்தபேய்
தாவிக் கண்கிழித் தூடுத ழற்பொறி
தூவிக் கண்ணருங் கண்டுயர் தோன்றுமே
 
"காவிக் கண் வழி காமம் உண்டார் என,
வாவிக்கண் மலி வண்டு உறழ் மொய்த்த பேய்
தாவிக் கண் கிழித்து, ஊடு தழல் பொறி
தூவி, கண்ண அருங் கண் துயர் தோன்றுமே.

     "கருங்குவளை மலர் போன்ற கண்ணின் வழியாகக் காம இன்பத்தை
உண்டார் என்ற காரணத்தால், தடாகத்தில் நிறைந்த வண்டுகளுக்கு ஒப்பாக
மொய்த்த பேய்கள் அவர்மீது தாவி, கண்களைக் கிழித்து, அவற்றின் ஊடே
நெருப்புப் பொறிகளைத் தூவுவதனால், கருதுதற்கு அரிய துயர்
அக்கண்களிடையே தோன்றும்.

     கண்ண + அரும் - 'கண்ணவரும்' என வரவேண்டியது 'கண்ணரும்'
எனத் தொகுத்தல் விகாரம் பெற்றது.