பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 356

செயல் முதிர்ந்து, எமது பாவமே, ஐயோ, இந்தப் பகையை எமக்குத் தேடித்
தந்தது! என்று பாவிகள் சிலர் நரகில் புலம்பி முழங்குவர்.

 
                       114
கெட்டோ மந்தோ மின்னென வொல்கிக் கெடுநன்றி
யிட்டோ மந்தோ வீட்டதி னிஃதே பயனந்தோ
பட்டோ மந்தோ புன்னய னக்கிப் பரவீட்டை
விட்டோ மந்தோ வேகுது மந்தோ வெனவேவார்.
 
'"கெட்டோம், அந்தோ! மின் என ஒல்கிக் கெடும் நன்றி
இட்டோம், அந்தோ! ஈட்டு அதின் இஃதே பயன்? அந்தோ!
பட்டோம், அந்தோ! புன் நயன் நக்கிப் பரவீட்டை
விட்டோம், அந்தோ! வேகுதும், அந்தோ!' என வேவார்.

     '"இன்னும் சிலர், கெட்டோம், ஐயோ! மின்னல் போல் ஒடுங்கி
மறையும் நன்மையைத் தேடி வைத்தோம், ஐயோ! தேட்டமாகிய அதன்
பயன் இதுவே, ஐயோ! படாத பாடெல்லாம் பட்டோம்; ஐயோ! அற்ப நன்மையை
நக்கிச் சுவைத்து மோட்ச வீட்டைத் தவற விட்டோம்; ஐயோ!
வேவோம் ஐயோ!' என்று புலம்பி வெந்து கொண்டிருப்பர்.

 
                     115
கண்மேல் வைத்த மாசென வாசை கவருள்ளம்
விண்மேல் வைத்த வான்றிரு வெண்ணா வெருள்வீங்கி
மண்மேல் வைத்த வாழ்வினை யீட்ட மலிகள்வாய்ப்
புண்மேல் வைத்த தீத்திரள் சேர்த்தோம் புதவென்பார்.
 
'"கண்மேல் வைத்த மாசு என, ஆசை கவர் உள்ளம்
விண்மேல் வைத்த வான் திரு எண்ணா வெருள் வீங்கி,
மண்மேல் வைத்த வாழ்வினை ஈட்ட, மலிகள் வாய்ப்
புண்மேல் வைத்த தீத்திரள் சேர்த்தோம் புதவு!' என்பார்.

     '"வேறு சிலர், கண்மேல் படர்ந்த மாசு போல, ஆசையினால்
கவரப்பட்ட உள்ளம் விண்மேல் பொருந்தியுள்ள சிறந்த செல்வங்களை
எண்ணாத மயக்கம் பெருகி, மண்ணுலகுக்கு உரிய வாழ்வுகளைத் தேடிக்
குவிப்பதற்காக மிகுந்த களவின் வழியாக நரகத்தில் புண்களின் மேல்
வைத்தற்குரிய தீத்திரள்களையே சேர்த்தோம்!' என்று புலம்புவர்.