பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 357

     களவின் வழியாகச் சேர்த்த பிறர் பொருள் நரகத்தில் புண்மேல்
வைத்தற்குரிய தீத்திரளைச் சேர்த்தலாய் முடிந்ததென்று கொள்க.

 
                      116
ஆறாக் கொண்டேம் வெம்பகை யாறா தடுகோபந்
தேறா கொண்டேம் வெங்கொலை செய்தே பழிதீர்ந்தே
மீறாக் கொண்டேந் தீநர கந்தோ வெரிகின்றே மாறா
கொண்டேம் பேய்ப்பகை யென்றே மருள்கிற்பார்.
 
'"ஆறு ஆக் கொண்டேம் வெம் பகை; ஆறாது அடு கோபம்
தேறா கொண்டேம்; வெங் கொலை செய்தே பழி தீர்ந்தேம்.
ஈறு ஆக் கொண்டேம் தீ நரகு; அந்தோ, எரிகின்றேம்!
மாறா கொண்டேம் பேய்ப்பகை!' என்றே மருள்கிற்பார்.


     '"மற்றும் சிலர், 'கொடிய பகையை வாழ்க்கை நெறியாகக்
கொண்டோம்; பகை ஆறாமல் கொல்லும் தன்மையான சினம் தெளியாமல்
கொண்டிருந்தோம்; கொடிய கொலையைச் செய்தே பழி முடித்துக்
கொண்டோம். இறுதியாக நெருப்பு நிறைந்த நரகத்தைப் பயனாகக்
கொண்டோம்; ஐயோ, எரிகின்றோம்! பேயாகிய பகையை மாறாமல் தேடிக்
கொண்டோம்!' என்று மயங்குவார்.

 
                  117
காதன் மிக்காக் கற்றவை கண்ணா கசடுள்ளத்
தாதன் மிக்காப் பற்றிய காமத் தமிழ்கின்றேம்
நாதன் மிக்கா நீதிவ ளர்த்த நரகெய்திச்
சாதன் மிக்கா வேகுது மென்றே தளர்கிற்பார்.
 
'"காதல் மிக்கு ஆக் கற்றவை கண்ணா, கசடு உள்ளத்து
ஆதல் மிக்கு ஆப் பற்றிய காமத்து அமிழ்கின்றேம்.
நாதன் மிக்கு ஆம் நீதி வளர்த்த நரகு எய்தி,
சாதல் மிக்கு ஆ வேகுதும்' என்றே தளர்கிற்பார்.

     "பின்னும் சிலர், 'ஆசை மிகுந்தமையால், அதனைப் போக்கக் கற்ற
நூல்களைக் கருதிப் பாராமல், குற்றம் உள்ளத்தில் படிந்து மிகுதியாகவே,
விடாது பற்றிக் கொண்ட காமத்தில் மூழ்குகின்றோம். அதனால், ஆண்டவன்
மிகுதியான தனது நீதியின்படி வளர்த்து வைத்த இந்நரகத்தை அடைந்து,
சாதலினும் மிக்க கொடுமையாக வேவோம்' என்று தளர்ச்சி அடைவர்.