பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 36

"பின், இயற் பொருவா அன்னான் பெருந்தகை இகழ்ந்து பேசும்
அன்னியத்து அவண் ஓர் ஈரேழ் ஆயிரத்து எழு நூறும்
வன்னியத் தடத்தில் உம்பி வயச் சினத்து இறைவன் நீதி
உன் இயற்கு உள்ளங் கூச ஒருங்கு வெந்து அடலை ஆனார்.


      "பின்னும், இயல்பில் தனக்கு ஒப்பாவார் யாரும் இல்லாத அம்
மோயிசனது பெருந்தன்மையை இகழ்ந்து பேசிய அறியாமையால் பதினாலாயிரத்து எழுநூற்றைம்பது பேர் அவ்விடந் தோன்றிய நெருப்புத்
தடாகத்தில் விழுந்து அமிழ்ந்தி, வல்லமையோடு கூடிய சினத்தையுடைய
இறைவனின் நீதியை எண்ணிப் பார்ப்பதற்கும் உள்ளங்கூச, ஒன்றாக
வெந்து சாம்பலாயினர்.

      எழுந்து பரந்த நெருப்பின் பரப்பு நோக்கி 'வன்னியத்தடம்'
எனப்பட்டது, அடலை ஆனது : எண், 16 : 41 - 50.

 
                   62
தொகையிலாத் தகவிற் காட்சிச்
     சுடரெலி சேயென் பானைச்
சிகையிலாத் தலைய வென்று
     சிறுவரெண் ணைந்தி ரண்டுந்
தகையிலாச் சொன்ன பாலாற்
     சடத்திரு கரடி பாய்ந்து
நகையிலாற் றியவோர் சொல்ல
     னடுங்கியார்த் தொருங்கு மாய்ந்தார்.
 
"தொகை இலாத் தகவின் காட்சிச் சுடர் எலிசேயு என்பானை,
'சிகை இலாத் தலைய!' என்று சிறுவர் எண்ணைந்து இரண்டும்
தகை இலாச் சொன்ன பாலால் சடத்து இரு கரடி பாய்ந்து,
நகையில் ஆற்றிய ஓர் சொல்லால் நடுங்கி ஆர்த்து ஒருங்கு                                           மாய்ந்தார்.

      "எண்ணில்லாத் தகுதியோடு தெய்வக் காட்சிகளாற் சுடர் விட்டுக்
கொண்டிருந்த எலிசேயு என்ற இறைவாக்கினரை, 'குடுமி இல்லாத
வழுக்கைத் தலையா!' என்று நாற்பத்திரண்டு சிறுவர் தகுதி நோக்காது
சொன்னார்கள். திடீரென இரண்டு கரடிகள் பாய்ந்து வந்தன. கேலியிற்
பேசிய ஒரு சொல்லின் காரணமாக, அது கண்டு சிறுவர் நடுங்கிக்
கூக்குரலிட்டனர். அனைவரும் ஒன்றாக மடிந்தனர்.