பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 37

      இலா சொன்ன - இலாது சொன்ன : 'இலாது' என்ற எதிர் மறை
வினையெச்சம் ஈறு கெட்டு நின்றது. (2 அர. 2: 23 - 25).

 
          63
ஈறடி யில்லான் குன்றத்
     தெழுதிய மறைக்கற் பேழை
தேறடி யடிக ளேந்திச்
     செல்லமற் றெவரு மெண்ணைந்
நூறடி யகல நாத
     னுவன்றுதான் செய்த வேவ
லாறடி யார்க்குந் தாரோ
     யாரணத் தறிதி யன்றோ
 
"ஈறு அடி இல்லான் குன்றத்து எழுதிய மறைக் கற் பேழை
தேறு அடி அடிகள் ஏந்திச் செல்ல, மற்று எவரும் எண் ஐந்
நூறு அடி அகல நாதன் நுவன்று தான் செய்த ஏவல்,
ஆறு அடி ஆர்க்கும் தாரோய், ஆரணத்து அறிதி அன்றோ?

      "ஆறுகால்களுள்ள வண்டுகள் முழங்கும் மாலையை அணிந்தவனே,
முடிவும் தொடக்கமும் இல்லாத இறைவன் சீனயி மலைமேல் நின்று வேத
கட்டளைகளை எழுதித் தந்த கற்கள் அடங்கிய பெட்டகத்தை வேத
நெறியில் தேறிய பாதங்களை உடைய குருக்களே ஏந்திச் செல்லவும், வேறு
எவரும் நாலாயிரம் அடி விலகிச் செல்லவும் அவ்விறைவனே சொல்லிச்
செய்த கட்டளையை அவ்வேத நூலால் அறிவாய் அல்லவா?

      வேத நெறியில் தேறிய அடி 'தேறடி' எனவும், ஆறு கால்களை
உடைய வண்டு 'ஆறடி' எனவும் காரணக் குறி பெற்றன. (ஜாசுவா 3 : 4)

 
                 64
செம்பதின் பிறப்பைந் தோடுஞ்
     சிறப்பணி வனையப் பேழை
தம்பதி வரக்கை கூப்பாத்
     தருக்கொடு நோக்கக் கான்முற்
கொம்பதி னிலைகள் போலக்
     குழைந்தபெற் சமித்தா ரங்கண்
ணைம்பதி னாயி ரத்தே
     துமைந்தபத் தொருங்கு வீழ்ந்தார்.