பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 360

மேம்பட்டவனாகிய சூசை புகழ் கொண்டு அமைந்த வேத நூல்
விதியை எடுத்துச் சொல்லி முடித்தான்.

     வயா - வருத்தம். தீஉறீஇ - சொல்லிசை அளபெடை.

                  கேட்டோர் உணர்வு

 
                     122
வீண்டா ரேறுட் பட்டென வன்னான் விரிநன்னூற்
கொண்டா ரன்னார் கொண்டவை யுள்ளிக் குழைகின்றார்
கண்டா ரென்னாக் கண்கள்பு தைத்தார் கலுழ்கின்றார்
மண்டார் வேட்கைத் தீயற விஃதே வழியென்பார்.
 
விண்டு ஆர் ஏறு உட்பட்டு என அன்னான் விரி நல்நூல்
கொண்டார் அன்னார்; கொண்டவை உள்ளிக் குழைகின்றார்;
கண்டார் என்னாக் கண்கள் புதைத்தார் கலுழ்கின்றார்;
"மண்டு ஆர் வேட்கைத் தீ அற இஃதே வழி" என்பார்.

      மேகத்திலிருந்து இழிந்த இடி உள்ளத்தில் பட்டாற்போல அச்சூசை
விரித்து உரைத்த நல்ல வேத நூலைச் சூழ நின்ற அவர்கள் மனத்துட்
கொண்டனர்; கொண்டவற்றை நினைந்து குழைகின்றனர்; நரகத்தையே நேரிற் கண்டவர்போலக் கண்களைக் கையால் புதைத்துக் கொண்டு அழுகின்றனர்;
"மண்டிப் பெருகுகின்ற ஆசைத் தீ அறுவதற்கு இந் நரக நினைவே வழி"
என்று சொல்லுவர்.

     நிகழ் கால எதிர்கால வினைமுற்றுக்களையும் தெளிவுபற்றி இறந்த
காலமாகவே கொள்க.

 
                   123
இன்பாற் கொண்ட பாவமி யற்று மியல்பிஃதேற்
றுன்பாற் கொண்ட நோன்பினி தென்பார் துகள்மல்கிப்
பின்பாற் கொண்ட வாகுல மெண்ணார் பிறழாதோ
ரன்பாற் கொண்ட தீதினி தென்பா ரதுவென்பார்.
 
"இன்பால் கொண்ட பாவம் இயற்றும் இயல்பு இஃதேல்,
துன்பால் கொண்ட நோன்பு இனிது" என்பார்; "துகள் மல்கிப்
பின்பால் கொண்ட ஆகுலம் எண்ணார் பிறழாது, ஓர்
அன்பால் கொண்ட தீது இனிது என்பார் அது" என்பார்.