பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 365

விழுந்து உற எடுத்து, உள் தாபம் விளைத்த கண் கலுழி போற்றி,
அழுந்து உறத் தழுவி, மெய்யோடு ஆர்வமும் உயிரும் ஒன்றச்
செழுந் துறவு இறைவன் சொன்ன தேறிய உணர்வின் தேறி
எழுந்து, உறத் தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான்
                                              மாதோ.


     செழுமையான துறவுக்குத் தலைவனான சூசை குனிந்து வாமனைத்
தூக்கி எடுத்து, அவன் உள்ளத்தில் பாவத்தை எண்ணிய வருத்தம்
விளைவித்த கண்ணீரைத் துடைத்து நீக்கி, உடலோடு அன்பும் உயிரும்
ஒன்றாகுமாறு அழுந்தத் தழுவிச் சொன்ன தேறுதலான உணர்வுகளால்
வாமன் தேறி எழுந்து நின்று, மிகத் தெளிந்த நெஞ்சினனாய் மீண்டும்
இதனை உரைக்கலானான்:

 
               131
கான்முழு திறைஞ்சு நோன்பின்
     கடல்கரை கண்ட நல்லோய்
தேன்முழு திறைஞ்சுந் தீஞ்சொற்
     றேறலைத் துளித்து நீயே
வான்முழு திறைஞ்சு நன்னூல்
     வழங்கிய வோதி கேட்க
ஊன்முழு திறைஞ்சுங் கோட்டி
     னுவாமதம் மாறிற் றன்றோ.
 
"கான் முழுது இறைஞ்சும் நோன்பின் கடல் கரை கண்ட நல்லோய்,
தேன் முழுது இறைஞ்சும் தீம்சொல் தேறலைத் துளித்து, நீயே
வான் முழுது இறைஞ்சும் நல்நூல் வழங்கிய ஓதி கேட்க,
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ"

     "காடுகளெல்லாம் வணங்கும் தவமாகிய கடலின் கரை கண்ட
நல்லவனே, தேன் வகைகளெல்லாம் வணங்கும் இனிய சொல்லாகிய
மதுவைத் தெளித்து, வானுலகமெல்லாம் வணங்கும் நல்ல வேத நூலின்
அடிப்படையில் நீ வழங்கிய அறவுரையைக் கேட்கவே, பகைவரின்
ஊன்களெல்லாம் அஞ்சி வணங்கும் கொம்பை உடைய யானையின் மதம்
மாறிற்று.