"சுழல் தரப்
புகைகள் நாறும் தூய் மலர்த் தவிசில், தேம்பூ
நிழல் தர, தொடலைக் கூந்தல் நீர்மையார் தோள்மேல் துஞ்சி,
அழல் தரக் கனன்ற மஞ்சத்து அழன்று அழன்று, ஊழி காலம்
புழல் தரப் புண்பட்டு, அங்கம் பொடி படல் இனிதோ, நெஞ்சே? |
"நெஞ்சே,
புகைகள் சுழல மணக்கும் தூய மலர்ப்படுக்கையில், தேன்
நிறைந்த பூக்கள் ஒளி தர, மாலை அணிந்த கூந்தலை உடைய மெல்லிய
தன்மையுள்ள மகளிர்தம் தோள்மேல் துயின்று இவ்வுலகில் சிறுபோது காமம்
நுகர்ந்து, மறுவுலகில் நெருப்பினால் வெம்பிய படுக்கையில் வெதும்பி
வெதும்பி, ஊழிக்காலம் உடம்பெல்லாம் துளையாகப் புண்பட்டு
நொறுங்குதல் இனியதோ?
| 134 |
உலைவைத்த
பொறிச்செந் தீயோ
டுடன்றவே
லுருவிப் பாய
மலைவைத்த வருவிக் கண்ணீர்
மலிந்தழு
தினிய தென்றோ
சிலைவைத்த பகழிச் சாயற்
றிருதுதல்
விழியை வெஃகி
விலைவைத்த மகளிர் வஞ்ச
வினைக்கொடு
மருண்டாய் நெஞ்சே. |
| |
"உலை வைத்த
பொறிச் செந் தீயோடு உடன்றவேல் உருவிப்பாய,
மலை வைத்த அருவிக் கண்ணீர் மலிந்து அழுது இனியது என்றோ,
சிலை வைத்த பகழிச் சாயல் திரு நுதல் விழியை வெஃகி,
விலை வைத்த மகளிர் வஞ்ச வினைக் கொடு மருண்டாய், நெஞ்சே? |
"நெஞ்சே,
அடுப்பில் ஏற்றிய பொறி பறக்கும் செந்நிற நெருப்போடு
சினந்த வேலும் பாய்ந்து ஊடுருவ, மலையில் தோன்றிய அருவி போலக்
கண்ணீர் பெருக நரகத்திற் கிடந்து அழுவது இனியது என்று கருதியோ,
வில்லில் இட்டு வைத்த அம்பின் தோற்றமாய் அழகிய நெற்றியோடு
பொருந்திய கண்களின் அழகை விரும்பி, தம் அழகை விலைப்படுத்தும்
மகளிர் தம் வஞ்சகச் செயலுக்குள் மாட்டிக் கொண்டு மயங்கினாய்?
'அழுவது'
இடைக்குறையாய், 'அழுது' என நின்றது.
|