பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 368

          135
தீய்த்திர டளிர்த்த நோயாற்
     றீயவர் புலம்பு மோதை
பேய்த்திர டளிர்த்த வோதை
     பிளந்தகா துணலின் பென்றோ
வீய்த்திர டளிர்த்த தேன்போல்
     விளம்பிய சொல்லென் றெண்ணிப்
போய்த்திர டளிர்த்த பொய்யிற்
     போழ்ந்தவாய் விழைத்தாய் நெஞ்சே.
 
"தீய்த் திரள் தளிர்த்த நோயால் தீயவர் புலம்பும் ஓதை
பேய்த் திரள் தளிர்த்த ஓதை பிளந்த காது உணல் இன்பு என்றோ,
வீய்த் திரள் தளிர்த்த தேன் போல் விளம்பிய சொல் என்று எண்ணிப்
போய், திரள் தளிர்த்த பொய்யின் போழ்ந்த வாய் விழைந்தாய், நெஞ்சே?

     "நெஞ்சே, பேய்க் கூட்டத்தினின்று பிறந்த ஓசையால் பிளந்த காது
தீத்திரளினின்று பிறந்த துன்பத்தால் தீயவர் நரகத்தில் புலம்பும் ஓசையையும்
சேர்த்து உண்ணுதல் இன்பம் என்று கருதியோ, மலர்த்திரளில் பிறந்த
தேன்போல் விலைமகளிர் சொல்லிய சொல் இனியது என்று எண்ணிப்
போய், திரளாகப் பிறந்த பொய்யினால் பிளந்த அவர்தம் வாயை
விரும்பினாய்?

     தீய், வீய் என்பன எதுகைப் பொருட்டு யகரம் பெற்றன.

 
          136
அலைவிர வூழல் வைகி
     யரவினஞ் சயின்றெஞ் ஞான்றுங்
கொலைவிர வூழிச் செந்தீக்
     குளித்தலே யினிய தென்றோ
வலைவிர வணியிற் பின்னி
     மலர்தவழ் கூந்தல் வெஃகிப்
புலைவிர வுணர்ந்த காமப்
     புணரியிற் குளித்தாய் நெஞ்சே.