பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 370

             138
கால்வழி காயும் பூவுங்
     கடியுமென் றிளமை நம்பா
மால்வழி தளிர்த்த காம
     வழிவளர் நிரையந் தந்த
நூல்வழி யொழுகல் விள்ளா
     நுகர்ந்தநஞ் சுமிழ்ந்தே யுய்தி
சூல்வழி சனித்த பாவத்
     தொடர்பினோ டூழ்த்த நெஞ்சே.
 
"கால் வழி காயும் பூவும் கடியும் என்று இளமை நம்பா,
மால் வழி தளிர்த்த காம வழி வளர் நிரையம் தந்த
நூல் வழி ஒழுகல் விள்ளா, நுகர்ந்த நஞ்சு உமிழ்ந்தே உய்தி,
சூல் வழி சனித்த பாவத் தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே!

     "கருப்பத்தின் வழியாக உடன் பிறந்த பாவத் தொடர்பினால் பதமழிந்த
நெஞ்சே, காற்று அடித்தவிடத்துப் பழமேயன்றிக் காயும் பூவும் அறுந்து
விழும் என்று கண்டு இளமையை நம்பாமல், மயக்கத்தின் வழியாகத்
தளிர்த்த காமத்தின் வழியாக வளரும் நரகம் பாடமாகத் தந்த நூலின்
வழியே நன்னெறியில் ஒழுகுதலை விடாமல், ஏற்கெனவே உண்டுள்ள
நஞ்சை உமிழ்ந்து உய்வு பெறுவாய்.

     நுகர்ந்த நஞ்சு உமிழ்தலாவது, ஏற்கெனவே செய்த காமப்
பாவங்களுக்காக மனம் வருந்தி, மன்னிப்புக்கோரி, தவஞ்செய்து கறை போக்குதலாம்.

 
               139
வள்ளிய வுருவந் தீமுன்
     வல்லையே யுருகும் வண்ணத்
துள்ளிய வருமை யாவு
     மூழன்முற் கரைந்து நீங்கி
யெள்ளிய வுள்ளங் கொண்மா
     சிசைத்தநூற் பளிங்கிற் கண்டு
தெள்ளிய தவநீ ராட்டிச்
     செயிரறத் தெளிதி நெஞ்சே.