பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 372

                    கேட்டோர் உணர்ச்சி

     - விளம், கூவிளங்காய்

 
       141
என்னவி யம்பினகா
லுன்னரு மின்பமுறீஇத்
துன்னவர் சூழ்மகிழும்
பன்னரும் பான்மையதே.
 
என்ன இயம்பின கால்,
உன்ன அரும் இன்பம் உறீஇத்
துன்னு அவர் சூழ் மகிழும்
பன்ன அரும் பான்மையதே.

     இவ்வாறெல்லாம் வாமன் சொல்லிய போது, நினைத்தற்கரிய இன்பம்
அடைந்து சுற்றிலும் கூடியிருந்தவர் கொண்ட மகிழ்ச்சியும் சொல்லுவதற்கு
அரிய தன்மையதாம்.

     அவர் சொல்லியவை மேல் தொடர்ந்து வருகின்றன, உன்னரும்,
பன்னரும் என வந்தன தொகுத்தல் விகாரம்.

 
          142
இனையவி யற்றியநூ
லனையவெ மக்களவோ
வனையவ ருஞ்சுடரைப்
புனையவோர் பூணுளதோ.
 
"இனைய இயற்றிய நூல்
அனைய எமக்கு அளவோ?
வனைய வரும் சுடரைப்
புனைய ஓர் பூண் உளதோ?

     "இத்தகைய மாற்றத்தை ஏற்படுத்திய வேத நூலை அத்தகையது என்று
ஒப்பிடுதல் எமது சிற்றறிவின் அளவுக்கு அடங்குவதோ? எல்லாவற்றையும்
அழகு செய்ய வரும் பகலவனை அழகு செய்ய ஓர் அணிகலன் உண்டோ?