பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 379

     
"தண் உறும் குணம் கொண்டாலும், தழலு தன் குணத்தைக் காட்டி,
விண் உறும் கதிர் ஒன்று உண் கால் வெங்கனல் எரிந்ததே போல்,
கண் உறும் கனல் அம் காமம் கண்ட ஓர் கவின் முன் காய்ந்து,
புண் உறும் கசடு உள் ஆகப் புழுங்கி வெந்து எரியும் அன்றோ?


     "வெப்பமான நெருப்பு, மேலே கூறியது போல், குளிர்ச்சி பொருந்திய
நீரின் குணத்தைக் கொண்டதாகத் தோன்றினாலும், வானத்திலுள்ள
பகலவனின் கதிர் ஒன்று தன்மேல் படிந்து உண்ணத் தொடங்கியதும் எரியும்
தன் குணத்தைக் காட்டி எரிந்த தன்மை போல், கண்ணின் வழியாக
நுழையும் நெருப்புத் தன்மை கொண்ட காமமும் கண்ட ஓர் அழகிய
பொருளின் முன் சூடேறி, புண்படத் தக்க கசடு உள்ளத்தில் படியுமாறு
வெம்பி வெந்து எரியும் அன்றோ?

     எனவே, பாவத்திற்குக் காரணமான பொருளையும் விலக்க வேண்டும்
என்பதாயிற்று.

 
            154
குலம்புரி கொடிய பேய்கள்
     கொலைத்தொழிற் கருவி சூழ்ந்து
சலம்புரி வலையை வைக்கத்
     தளைப்படிற் பிரித லாற்றா
வலம்புரி தவத்தி னாமவ்
     வரையுறா விலகல் வேண்டும்
கலம்புரி பைம்பூ மூழ்கிக்
     கதிர்த்தபொற் குன்றின்ார்போய்.
 
"குலம் புரி கொடிய பேய்கள் கொலைத் தொழில் கருவி சூழ்ந்து,
சலம் புரி வலையை வைக்க, தளைப் படின், பிரிதல் ஆற்றா.
வலம் புரி தவத்தின் நாம் அவ் வலை உறா விலகல் வேண்டும்,
கலம் புரி பைம் பூ மூழ்கிக் கதிர்த்த பொன் குன்றின் மார்போய்!