பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 380

     "அணிகலனிலும் கட்டிய பசும் பூ மாலையிலும் மூழ்கி ஒளி விடுகின்ற
பொற் குன்று போன்ற மார்பை உடையவனே, குலத்திற்கு ஏற்ற தொழிலைச்
செய்யும் கொடிய பேய்கள் பாவக் கொலைத் தொழிலுக்கு உரிய கருவிகளை
ஆராய்ந்து கண்டு, வஞ்சகம் புரிவதற்கான வலையை விரித்து வைகக, நாம்
அந்த வலையில் மாட்டிக்கொண்டால் அதனை விடுவித்து வெளியே வருதல்
இயலக் கூடியது அன்று. எனவே, வலிமை தரும் தவத்தின் மூலமாய் நாம்
அவ்வலையில் அகப்படாமலே விலகிக் கொள்ள வேண்டும்.

 
                 155
முற்பட வுரைத்த விஞ்சை
     மொழிகுதுந் தளிர்ப்ப மீண்டே
விற்பட வெதிர்த்துச் செய்போர்
     வினையிது நோக்கல் வேண்டா
மற்பட வெற்றி வேண்டின்
     மருள்படா தொடுங்கல் வேண்டுங்
கற்பட வாவி சால்பு
     காணெனத் தெளிக வேலோய்.
 
"முன் பட உரைத்த விஞ்சை மொழிகுதும் தளிர்ப்ப மீண்டே:
வில் பட எதிர்த்துச் செய் போர் வினை இது நோக்கல் வேண்டா.
மல் பட வெற்றி வேண்டின், மருள் படாது ஒடுங்கல் வேண்டும்.
கற்பு அட ஆவி சால்பு காண் எனத் தெளிக, வேலோய்!

     "வேலைத் தாங்கியவனே, அற வாழ்வு தழைக்குமாறு முன் நெஞ்சில்
படுமாறு சொன்ன உபதேசத்தையே மீண்டும் சொல்வோம்: வில்லைக்
கொண்டு எதிர்த்துச் செய்யும் போர்ச்செயல் போல இதனை நோக்க
வேண்டாம். இப் போரில் உறுதியாக வெற்றி வேண்டுமாயின், மயக்கத்திற்கு
இடந்தராது விலகிச் செல்லுதலே வேண்டும். கற்பைக் கொல்வதற்கு
ஆவிபடுதலே போதுமானது எனக் கண்டு தெளிவாயாக. அடுத்தவரி
"நுண்ணியது ஓர் ஆவிபடத் தூய பளிங்கு ஆசு உறும்" என்ற கருத்து (6:4)
வருதல் காண்க.