பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 381

             156
கச்சொன்றிட் டுணர்வோ டுக்கங்
     கட்டிமெய்ச் சகட்டை யோட்டி
நச்சொன்றிட் டேதச் சேற்றுண்
     ணல்லுயி ரச்சிற் றாய்மற்
றச்சொன்றிட் டூர்த றேற்றா
     தழும்பலர்க் கண்டீர் நல்லோர்
மெச்சொன்றிட் டச்சி றாமுன்
     வீடுற வூர்மின் பாகீர்.
 
"கச்சு ஒன்று இட்டு உணர்வோடு ஊக்கம் கட்டி, மெய்ச் சகட்டை
                                              ஓட்டி,
நச்சு ஒன்று இட்டு, ஏதச் சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய், மற்று
அச்சு ஒன்று இட்டு ஊர்தல் தேற்றாது, அழும் பலர்க் கண்டீர்,
                                               நல்லோர்
மெச்சு ஒன்று இட்டு, அச்சு இறா முன் வீடு உற ஊர்மின், பாகீர்!"

     "வாழ்க்கை வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கும் பாகர்களே, அற
நோக்கம் என்னும் கயிற்றைக் கொண்டு அறிவு ஊக்கம் என்னும்
எருதுகளைப் பூட்டி, உடல் என்னும் வண்டியை ஓட்டிச் சென்றிருந்தும்,
வழியில் ஆசை என்னும் பாரத்தை ஏற்றிக் கொண்டு, பாவம் என்னும்
சேற்றுள் மாட்டி, நல்ல உயிர் என்னும் அச்சு ஒடிந்து போகவே, வேறு
ஓர் உயிராகிய அச்சு இட்டு ஓட்டுதற்கு தெளிவு பெறாது, இப்பொழுது
நரகத்திற் கிடந்து அழும் பலரை என் உரையால் கண்டீர். எனவே,
நல்லவர் மெச்சும் புண்ணியம் என்னும் பாரத்தை ஏற்றிக் கொண்டு,
உயிராகிய அச்சு ஒடிவதன்முன் மோட்ச வீடு சேரும் வகையில் வண்டியை
ஓட்டிச் செல்லுங்கள்."

     இதனோடு சூசை தன் உரையை முடிக்கிறான். இது வாமன் உட்பட,
அங்குக் கூடியிருந்த அனைவர்க்கும் சொல்லியது.