பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 382

                  157
விண்டுளி கமழக் கஞ்சம்
     வெங்கதி ருண்ட தேபோற்
பண்டுளி யுரையிற் சொன்ன
     பயனெலா முண்ட யாரும்
விண்டுளி முத்த மாக
     வெள்வளை யுண்ட தேபோற்
பண்டுளி மருணீத் தோதி
     பரிந்தற மாகச் செய்தார்.
 
விண்ட உளி, கமழக் கஞ்சம் வெங் கதிர் உண்டதே போல்,
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும்
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல்,
பண்டு உளி மருள் நீத்து, ஓதி பரிந்து, அறம் ஆகச் செய்தார்.

     சூசை இவ்வாறெல்லாம் விரித்துச் சொன்ன போது, தாமரை மலர்
மணம் கமழக் கதிரவனின் வெப்பமான கதிரை உட்கொண்டது போல்,
யாழினின்று பிறந்த இசை போன்ற உரையால் சொன்ன பயனையெல்லாம்
யாவரும் இனிதாகச் செவியால் உண்டனர். பின், முத்தாக மாறும் வண்ணம்
வெள்ளிய சங்கு மழைத்துளியை உண்டது போல், முன் நாளில் தம்மிடம்
இருந்த மயக்கமெல்லாம் விடுத்து, சூசையின் உபதேசத்தை அன்போடு
ஏற்றுக் கொண்டு, அது புண்ணியமாக விளையச் செய்தனர்.

     'விண்டுளி' என்பது முதலடியில் தொகுத்தல் விகாரம்.

 
                 158
கயல்பொரு துகளிப் பாயக்
     கலங்கிய குமரி யன்ன
மயல்பொரு சேவ லோடு
     மதிர்ந்தெழச் சாய்ந்த செந்நெல்
வயல்பொரு வொழிந்த நாடு
     வளன்றரு மோதி தன்னாற்
புயல்பொரு துயர்வான் வீட்டைப்
     புகுமறு காயிற் றன்றோ.