பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 387

குடக்கு நேர் வைகும் தேயம் குணித்தனர், செப்பம் மாறி,
வடக்குநேர் நெடுநாள் செல்ல, 'வழி அது அன்று' என்று கேட்கின்,
தொடக்குநேர் தடம் செல்லாதால் துயர் அலால், காட்டுகின்ற
கிடக்கும்நேர் நெறி செல்லாரோ கேள்வியர்?" என்றான் சூசை.


     சூசை சுரமியை நோக்கி, "நேர் மேற்கே இருக்கும் நாட்டை அடையக்
கருதினவர், சரியான வழி தவறி, நேர் வடக்கே நெடுநாள் சென்றபின்,
'அங்கே செல்ல அது வழியன்று' என்று அறிந்தவர் சொல்லக் கேட்டால்,
தொடக்கத்தில் நேர் வழியில் செல்லாதது பற்றித் துயரம் கொள்வதும்
அல்லாமல், நல்லறிவுடையவராயின், அறிந்தவர் பின் காட்டுகின்ற நேரே
கிடக்கும் வழியில் செல்லாதிருப்பரோ?" என்றான்.

 
          6
நின்னெறி கதியைச் சேரு
     நெறியென வறிய நாங்க
ளென்னெறி வழாமை செல்லு
     மென்னினீ சால்போ வென்றாள்
நன்னெறி யுரையிற் கேட்கி
     னணுகலீ ருரைத்த ஞானத்
தந்நெறி யுரிய தென்றா
     லறிந்துளந் தெளிக வென்றான்.
 
"நின் நெறி கதியைச் சேரும் நெறி என அறிய நாங்கள்,
'என் நெறி வழாமை செல்லும்' என்னின் நீ, சால்போ?"என்றாள்.
"நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர்; உரைத்த ஞானத்து
அந்நெறி உரியது என்றால், அறிந்து, உளம் தெளிக" என்றான்.

     சுரமி, "உன் சமயநெறி வான்கதியைச் சேருமென்று நாங்கள. அறிய,
'என் சமய நெறி தவறாமல் செல்லும்' என்று மட்டும் நீ சொல்வதாயின்,
அது போதுமோ?" என்றாள். சூசை, "நல்ல சமய நெறி என்று வெறும்
சொல்லாக மட்டும் கேட்பதனால் அதனை அணுகாதீர்; தொடர்ந்து
சொல்லிய ஞான விளக்கத்தால் அந்நெறியே நன்னெறி என்பதற்கு
உரியதென்று கண்டால், மேலும் அதைப்பற்றி அறிந்து, மனத் தெளிவு
அடையுங்கள்" என்றான்.