பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 390

என்று சூழ நின்ற யாவரும் நகைத்தனர். அவள் மயக்கத்தால் ஏற்படும்
சினத்துக்கு ஆளாகி, "உருவத்தோடு காணப்படும் கனவும் பொய்யாகுமோ?
அது உட் குறித்த பொருளோடு பொருந்துவதன்றாயின், தோன்றுவதன்
நோக்கம் என்னவோ? சொல்லுங்கள்!" என்றாள்.

 
            10
சினவிடை மருண்ட வுள்ளந்
     தெளிவறப் பொங்கல் வேண்டா
கனவிடை யுணர்ந்த காட்சி
     கனவிடை அடைந்த பொன்போன்
மனவிடை யெண்ணிற் கொன்னே
     வடுவலாற் பயனொன் றுண்டோ
வெனவிடை யுரைத்த சூசை
     இயல்பட விரித்துச் சொன்னான்.
 
"சினவு இடை, மருண்ட உள்ளம் தெளிவு அறப் பொங்கல் வேண்டா.
கனவு இடை உணர்ந்த காட்சி, கனவு இடை அடைந்த பொன் போல்
மன இடை எண்ணின், கொன்னே வடு அலால் பயன் ஒன்று உண்டோ?
என விடை உரைத்த சூசை, இயல் பட விரித்துச் சொன்னான்:

     "மயங்கிய மனம் தெளிவு பெறா வண்ணம் சினத்திற் பொங்குதல்
வேண்டாம். கனவிலே உணர்ந்த காட்சியைக் கொண்டு, அக்கனவில்
உண்மையாகவே பொன்னை அடைந்தது போல் மனத்திலும் எண்ணிக்
கொண்டால், வீணே குற்றம் சாருமே அல்லாமல், ஏதேனும் பயன்
உண்டோ?" எனச் சுரமிக்கு விடை சொல்லிய சூசை, கனவின் இயல்பு
விளங்க விரித்துச் சொல்லத் தொடங்கினான்: