பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 395

     நோய் கொண்ட இரண்டு கண்களும் கதிரவனைப் பார்க்க இயலாது
மூடிக் கொண்டது போல, தாய்க்கு உரிய அன்போடு சூசை சொல்லித் தந்த
வேத நூற் கருத்தை மனத்தில் கொள்ளாமல், தீயைப் போலச் சினம்
பொங்க மனத்துள் சீறிய சுரமி சோர்ந்து போய், தான் கொண்ட
வஞ்சகத்தை நிறைவேற்ற எண்ணி, அது நிறைவேறாமையால் புகைந்து
கொண்டிருந்த தன் மனச்சுமை தாங்க இயலாதவள் ஆனாள்.

 
           17
காழ்வளர் தருவின் கோட்டங்
     கைக்கொடு நிமிர்க்க லாற்றா
ஆழ்வளர் புண்ணு மாறா
     வூழுழிக் கிழவர் கொண்ட
தாழ்வளர் கசடு மாற்றார்
     சாற்றிய வவரி னூங்கு
மாழ்வளர் கடலின் வஞ்சத்
     தறிவிலா ரென்றுந் தேறார்.
 
காழ் வளர் தருவின் கோட்டம் கைக்கொடு நிமிர்க்கல் ஆற்றா;
ஊழ் வளர் புண்ணும் ஆறா: ஊழ் உழிக் கிழவர் கொண்ட
தாழ் வளர் கசடு மாற்றார்: சாற்றிய அவரின் ஊங்கும்,
ஆழ் வளர் கடலின் வஞ்சத்து அறிவு இலார் என்றும் தேறார்.

     வைரம் பாய வளர்ந்த மரத்தின் கோணலைக் கையால் நிமிர்த்தல்
இயலாது; பழமையாக வளர்ந்து போன புண்ணும் ஆறாது; காலங் காலமாக
முதியவர் பழக்கத்திற் கொண்ட தாழ்வு நிறைந்த குற்றத்தை மாற்ற மாட்டார்;
முன் சொல்லிய கிழவருக்கும் மேலாக, ஆழமாக வளர்ந்த கடல் போன்ற
வஞ்சகம் பூண்டு அதனோடு நல்லறிவும் இல்லாதவர் எவ்வளவு சொல்லியும்
என்றும் தெளிவு பெறார்.