பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 409

     "நமக்கு உறவு முறையும் தனக்குக் குலச் சிறப்பும் என ஒன்றுமில்லாத
யாரோ ஒருவன் முனிவன் போன்ற உருவத்தைக் காட்டி, குளிர்ச்சி தரும்
தோற்றத்தைக் காட்டி, அக்குளிர்ச்சி பயனளிக்கத் தக்க அன்பு எழுமாறு
கனிவோடு கூறும் தன்மையைக் காட்டி, இனிய சொல்லாகிய கண்ணியால்
கேட்பவர் உள்ளத்தைக் கட்டி நன்மை என்ற தோற்றத்தையும் காட்டி,
சிறப்பு வாய்ந்த நான்கு வேதங்களையுமே ஒழித்து விட்டான்!

 
             41
மாகையோ மயலோ யாதோ
     வறுமையா னுரைகள் வெஃகி
யோகையோ டெவரும் போய்வே
     றொருமறை விரும்பிக் கேட்பத்
தோகையோ டொழிந்து வீழ்ந்த
     துணைமயி லென்னக் கோயி
லீகையோ டினியெந் தேவ
     ரென்றழு துரைசோர்ந் தாளே.
 
"மாகையோ, மயலோ, யாதோ? வறுமையான் உரைகள் வெஃகி,
ஓகையோடு எவரும் போய் வேறு ஒரு மறை விரும்பிக் கேட்ப,
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன, கோயில்
ஈகையோடு, இனி எம் தேவர்...!" என்று அழுது உரை சோர்ந்தாளே.

     "அவன் செய்த மாய்கையோ, மக்களின் மயக்கமோ, இவற்றுள்
யாதோ? அவ்வேழையின் வேத உரைகளை விரும்பி, யாவரும்
மகிழ்ச்சியோடு போய், நம் வேதமல்லாத மற்றொரு வேதத்தை விரும்பிக்
கேட்ட தீங்கினால், தோகையோடு இறந்து விழுந்த இரு மயில்கள் போல,
முதலில் நம் பொற்கோவில்கள் அழிந்ததோடு, இனி எம் தேவர்களும்...!"
என்று அழுதவண்ணம் இடையே உரை சோர்ந்தாள் சுரமி.

     'இனி, எம் தேவர்களும் அழிவரோ!" என்று முடிக்க வேண்டியவள்,
அது பற்றிய துயரம் தாளாமல் அழுததோடு உரை சோர்ந்தாள். மாகை -
'மாய்கை' என்ற சொல் எதுகை ஒலிநயம் பற்றி இடையே யகரம் குறைந்தது.
ஓகை-'உவகை' என்ற சொல்லின் மரூஉ..