பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 416

     பாலால் ஆகிய கடலில் கிடந்து நுரை சூழ்ந்துள்ள பவளக் கட்டை
போல், காலம் செய்த கோலமாக நரை பூண்ட முதியவனாகிய குண்ணன்
வெண்மையான தூய ஆடை விரித்த அழகிய மெத்தையில் எழுந்து
அமர்ந்தான். நூலறிவு தந்த உணர்வில் மிக்க அவன் கூர்மையான
அன்போடு தவம் செய்து பெற்றவனும் வேலால் வினை செய்யும்
திறமுள்ளவனுமாகிய தன் சிறந்த மகனின் செயலைக் குறிப்பாய் அறிந்து
"அருகில் வருக!" என அழைத்தான்.

     பாற் கடல் வெண் தூய் கலைப் பூந் தவிசிற்கும், நுரை நரைத்த
தலைக்கும், பவளக் கட்டை செந்நிற மேனிக்கும் உவமை, இள நரையும்
உண்டாதலின், அதனை விலக்க, 'கால் செய் நரை மூத்தோன்' என்றார்.
'அற்க' என்பது அருகு அழைக்கும் விளிக் குறிப்புச் சொல். நம்பி-ஆண்பாற்
சிறப்புப் பெயர்; இங்குச் சிறந்த மகனை உணர்த்திற்று. கால்-காலம்
என்பதன் கடைக்குறை.

 
                  51
நெஞ்சே கொள்பிணியை
     முகந்தந் தென்ன நின்முகமு
நஞ்சே கொள்வினையுண்
     ணாட்டிற் றென்ன நல்குமதே
யஞ்சே லெனக்குரைமோ
     வரிகண் ணிட்ட வஞ்சனம்போற்
செஞ்சே டுருவோய்தன்
     செயிரார் காண்பார் தெளிந்தென்றான்
 

"நெஞ்சே கொள் பிணியை முகம் தந்து என்ன, நின்முகமும்
நஞ்சே கொள் வினை உள் நாட்டிற்று என்ன நல்கும். அதே,
அஞ்சேல், எனக்கு உரைமோ, அரி கண் இட்ட அஞ்சனம் போல்,
செஞ் சேடு உருவோய், தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து?" என்றான்


     தந்தை அருகு வந்த மகனை நோக்கி, "செந்நிறமான அழகிய
உருவமுள்ளவனே, நெஞ்சில் ஒருவன் கொண்ட துன்பத்தை அவன்
மெலிந்த முகம் காட்டுவது போல, உன் முகமும் நஞ்சு கொண்ட செயலில்
உன் உள்ளம் ஈடுபட்டது என்பதைக் காட்டி நிற்கும். அஞ்சாதே; அதனை
எனக்குச் சொல். ஏனென்றால், செவ்வரி படர்ந்த கண்ணுக்கு இட்ட
மையைப் போல, யார் தன் குற்றத்தைத் தெளிவாகத் தாமே கண்டு
உணர்வார்?" என்றான்.