பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 419

"விள்ளா அரும்பு ஒப்ப விளை நல் நாகின், வேல் கடல் முன்
எள்ளா வில் தலைவன் யூதர் நாட்டில் இருந்தேன் நான்"
நள்ளா மதி தாழ்ந்தான் நைய ஆங்கு அந்நாள் அருகே
உள்ளா வயத்து உற்றது உரைப்ப, போற்றி உணர்க" என்றான்.


     "விரியாத அரும்பு போல் அமைந்த நல்ல இளமைப் பருவத்தில்
வேற்படையாகிய கடலின் முன் செல்லும் இகழ்ச்சி இல்லாத விற்படையின்
தலைவனாக நான் யூதர் நாட்டில் வாழ்ந்தேன். யூதரை விரும்பாத அறிவில்
தாழ்ந்த ஒருவன் நைந்து கெடுமாறு அந்நாட்டில் அவ்விடத்தின் அருகே
முன்னொரு காலத்தில் இறைவனின் உணர இயலாத வலிமையினால்
நிகழ்ந்ததை நான் சொல்லுவேன். நீ அதனை விரும்பி உணர்வாயாக"
என்றான்.

     தலைவன் + யூதர் - 'தலைவ னியூதர்' என யகரத்தின் முன் மெய்
இகரம் பெற்றது. 'உணர்கென்றான்' என நின்றது தொகுத்தல் விகாரம்.

                    சினக்கரன் சிதைவு

      - விளம், - விளம், - மா, கூவிளம்

 
                     55
கனக்கரந் தழுவமேற் கதிர்கொள் குன்றின்வீழ்
புனற்கரந் தழுவமேற் பொலிய சீரிய
மெனக்கரந் துறைநல மியைந்த நாட்டையாள்
சினக்கர னெனும்பெயர் சிறந்த வேந்தர்கோன்.
 
கனக் கரம் தழுவ மேல், கதிர் கொள் குன்றின் வீழ்
புனல் கரம் தழுவ மேல், பொலி அசீரியம்
என, கரந்து உறை நலம் இயைந்த நாட்டை ஆள்
சினக்கரன் எனும் பெயர் சிறந்த வேந்தர் கோன்.

     மேலே மேகமாகிய கை தழுவிக் கொண்டிருக்க, ஒளியைக்
கொண்டுள்ள குன்றிலிருந்து விழுகின்ற அருவியாகிய கை தரைமேல்
தழுவிக் கொண்டிருக்க, வளத்துடன் பொலியும் அசீரியம் என்ற பெயர்
கொண்டு, ஆள்வோன் கொடுமையால் தன்னிடம் பொருந்திய நலமெல்லாம்
மறைந்து தங்குகின்ற நாட்டை ஆளும் சினக்கரன் என்னும் சிறந்த பெயரைக்
கொண்ட அரசர்க்கரசன் ஒருவன் இருந்தான்.