பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 42

                 70
மெய்யுண்ட திறத்த வீரர்
     விளிவதற் கஞ்சு வாரோ
கையுண்ட பசும்பொற் செங்கோல்
     கடிதலி னிறத்த னன்றே
நெய்யுண்ட படைகொண் டொன்னா
     னிறையுயி ருண்டு நானு
மொய்யுண்ட மடிவுற் றாலு
     முடியுட னினிது மாள்வேன்.
 
"மெய் உண்ட திறத்த வீரர் விளிவதற்கு அஞ்சுவாரோ?
கை உண்ட பசும் பொற் செங்கோல் கடிதலின் இறத்தல் நன்றே.
நெய் உண்ட படை கொண்டு ஒன்னான் நிறை உயிர் உண்டு, நானும்
மொய் உண்ட மடிவு உற்றாலும், முடியுடன் இனிது மாள்வேன்!

      "உடலிற் பொருந்திய திறத்தை உடைய வீரர் சாவதற்கு
அஞ்சுவாரோ? கையிற் கொண்ட பசும் பொன்னாலாகிய செங்கோலைக்
கைவிடுதலினும் இறத்தல் நலமாகும். நானும் நெய் பூசிய ஆயுதங்கொண்டு
பகைவனது உயிரை முற்றிலும் உண்டு, உடலெல்லாம் புண்கள் மொய்த்த
சாவே அடைய நேரிடினும், முடியோடு இன்பமாய்ச் சாவேன் !

 
            71
என்றன னிறைவன் மீட்டு
     மிழிமத யானைச் சீற்றம்
வென்றன னொருவன் றானை
     மிடற்றலை மலக்க னென்பா
னின்றன னவனை நோக்கி
     நீதிநீத் துரைத்த காதை
சென்றன வெவணுங் கூசத்
     திசையெலா முருமிற் சொன்னான்.
 
என்றனன் இறைவன்; மீட்டும், இழி மத யானைச் சீற்றம்
வென்றனன் ஒருவன், தானை மிடல் தலை மலக்கன் என்பான்
நின்றனன்; அவனை நோக்கி, நீதி நீத்து உரைத்த காதை
சென்றன எவனும் கூசத் திசை எலாம் உருமிற் சொன்னான்.