பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 424

     திறம் தரவும் எடுக்கவும் வல்ல கடவுளை மதியாமையால் அத்திறம்
'பொய்த்திறம்' எனப்பட்டது. திறத்து + யூதர் - 'திறத்தியூதர்' என யகரம்
வரக் குற்றியலுகரம் இகரமாயிற்று. உறீஇ-சொல்லிசை அளபெடை. இதுமுதல்

     76-ம் பாடல் முடியவுள்ள நிகழ்ச்சி பழைய ஏற்பாடு, II அரசர்,
18 : 13-37, 19 : 1-37 காண்க.

 
                     64
வேற்கடல் பரிக்கடல் வேழந் தேரொடு
நாற்கட லொருப்பட நடுங்க நாற்றிசை
நீற்கட லெதிர்த்தென நினைப்பி னெய்தின
னூற்கடல் வேந்துறை நகரை நோக்கினான்.
 
வேல் கடல் பரிக் கடல் வேழம் தேரொடு
நால் கடல் ஒருப்பட, நடுங்க நால் திசை,
நீல் கடல் எதிர்த்து என நினைப்பின் எய்தினன்;
நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான்.

     வேலைத் தாங்கிய காலாட் படையாகிய கடல், குதிரைப் படைக்
கடல், யானைக் கடல், தேர்க் கடல் என்னும் நான்கு கடல்களையும்
ஒன்றாகக் கொண்டு, நான்கு திசைகளும் நடுங்குமாறு போய், நீலக் கடல்
எதிர்த்தாற் போன்று நினைத்த அளவிலே சென்று சேர்ந்து, வேத நூலாகிய
கடலைக் கற்றுத் தேர்ந்த யூதர் மன்னன் வாழ்ந்த எருசேலம் நகரை
நோக்கினான்.

     அக்காலத்து யூதர் மன்னன் எசேக்கியன் என்று அறிக. 'நீல்' - நீலம்
என்பதன் கடைக்குறை.

 
               65
கார்விளை இடிமொழிக் கதத்தில் யூதர்தஞ்
சீர்விளை மறைநலஞ் செகுத்து வந்துதன்
னீர்விளை மரையடி பணித னேர்கிலாற்
போர்விளை சுடுமொழித் தூது போக்கினான்.
 
கார் விளை இடி மொழிக் கதத்தில், யூதர் தம்
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து, தன்
நீர் விளை மரை அடி பணிதல் நேர்கு இலால்,
போர் விளை சுடு மொழித் தூது போக்கினான்.